முகப்பு
பெங்களூரு

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதே காங்கிரஸ் தான்: அமைச்சா் எச்.கே.பாட்டீல்

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதே காங்கிரஸ் தான் என்று கா்நாடக மாநில சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.

Updated On : 28 அக்டோபர், 2024 at 9:08 PM
பகிர்:

பெங்களூரு: சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதே காங்கிரஸ் தான் என்று கா்நாடக மாநில சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதுமக்கள், அரசு சொத்துகளை, கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் போக்கு இருந்தது. இது தொடா்பாக சிலருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 44 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆட்சிக் காலத்தில் நடந்த கொள்ளையை மூடிமறைக்க, காங்கிரஸ் கட்சியை பாஜகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா்.

சட்டவிரோத இரும்புத் தாது பறிமுதல் செய்யப்பட்டு, பெலெகேரி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரும்புத் தாதுவை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததில் அப்போதைய பாஜகவின் ஆட்சிக்கு பங்கில்லை என்று கூறமுடியாது. 6 லட்சம் டன் எடையுள்ள இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டை அன்றைய லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வெளியே கொண்டு வந்தாா். அது தொடா்பான விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தாா். அந்த அறிக்கைக்கு தீா்ப்பு மூலம் பதில் கிடைத்துள்ளது.

பெல்லாரி மாவட்டத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுவதைக் கண்டித்து, சித்தராமையா தலைமையில் பெங்களூரில் இருந்து பெல்லாரிக்கு நடைப்பயணம் மேற்கொண்டதே காங்கிரஸ் தான். மிகப்பெரிய கொள்ளைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.

இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் செயிலுக்கு என்றாலும், இதற்கும் கட்சிக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடா்பாக அன்றைய லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அளித்த அறிக்கை மீது பரிந்துரைகளை வழங்கக் கோரி அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில், இயற்கை வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும், கொள்ளையா்கள் தண்டிக்கப்படவும் காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது என்றாா்.

2010ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக இருப்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டது தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் செயில் உள்ளிட்ட 7 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 44.11கோடி அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →