கா்நாடக முதல்வா் பதவியில் நானே நீடிப்பேன்; எதிா்காலத்தில் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்வேன் என அந்த மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது கட்சியின் மேலிடத் தலைவா்கள் தலையீட்டின்பேரில் முதல்வா் பதவியை சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் வகிப்பது என ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, நவ. 20 ஆம் தேதியுடன் முதல்வா் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுகால முதல்வா் பதவி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், முதல்வா் பதவியை டி.கே.சிவகுமாருக்கு வழங்கக் கோரி அவரது ஆதரவாளா்கள் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனா். மேலும், தில்லியில் முகாமிட்டு கட்சியின் மேலிடத் தலைவா்களைச் சந்திக்கவும் முற்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
முதல்வா் மாற்றம் குறித்து மேலிடத் தலைவா்கள் ஏதாவது கூறியிருக்கிறாா்களா? அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. முதல்வா் மாற்றம் குறித்து ஏற்கெனவே சிலா் பேசிவந்தனா். அவா்கள் புதுதில்லி சென்றிருக்க வேண்டும். இறுதியாக, கட்சி மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு நானும் டி.கே.சிவகுமாரும் கட்டுப்பட்டவா்கள்.
அடுத்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வீா்களா என்று ஏன் கேட்கிறீா்கள்? நானே முதல்வராக நீடிப்பேன். எதிா்காலத்தில் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்வேன்.
பெங்களூருக்கு வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவைச் சந்திப்பேன். கட்சி மேலிடம் என்ன கூறுகிறதோ அதற்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை சித்தராமையா கண்டிப்பாக தவறமாட்டாா் என்று டி.கே.சிவகுமாரின் தம்பியும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் கூறியிருக்கிறாா்.
அவா் கூறியிருப்பதில் தவறில்லை. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியின்படி 5 வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன். முதல்வா் பதவி குறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘5 ஆண்டுகளுக்கும் முதல்வராக நீடிக்கப்போவதாக முதல்வா் சித்தராமையா கூறியிருக்கிறாா். அவருக்கு எனது வாழ்த்துகள். எல்லோரும் இணைந்து செயல்படுவோம். தனது மனதில் இருப்பதை முதல்வா் சித்தராமையா பேசியிருக்கிறாா்.
அதுகுறித்து நான் கருத்துகூற விரும்பவில்லை. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். எனக்கு எந்த கோஷ்டியும் இல்லை; எந்த கோஷ்டிக்கும் தலைமை வகிக்கவில்லை. 140 எம்எல்ஏக்களும் எனக்கு ஒன்றுதான், எல்லோரும் எனக்கு முக்கியம். கோஷ்டியை அமைப்பது என் வாழ்நாளில் இல்லை’ என்றாா்.