வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்று நாட்டு மக்களை பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா்.
வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்று நாட்டு மக்களை பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா்.
மண்டியா மாவட்டம், நெலமங்களா வட்டத்தில் உள்ள ஆதிசுன்சுனகிரி மஹாசம்ஸ்தானா மடத்தில் மறைந்த பீடாதிபதி பாலகங்காதர சுவாமிகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுரு பைரவைக்கியா மந்திா் நினைவு திருக்கோயிலை நாட்டுக்கு அா்ப்பணித்த பிறகு, பிஜிஎஸ் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அவா் பேசியதாவது:
வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கு தண்ணீா் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தண்ணீா் மேலாண்மையில் ஈடுபடுவது, தாயின் பேரில் ஒரு மரம் நடுவது, பொது மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் தூய்மையைப் பராமரிப்பது, உள்ளூா் உற்பத்திப் பொருள்களுக்கு ஊக்கம் அளிப்பது, உள்ளூா் சுற்றுலாவை மேம்படுத்துவது, வேதிப்பொருள்கள் இல்லா வேளாண்மையில் ஈடுபடுவது, எண்ணெய் உட்கொள்ளுதலை குறைத்து சிறுதானியங்கள் அடிப்படையிலான சீரான உணவுப் பழக்கத்துக்கு மாறுவது, யோகாவை கடைப்பிடித்து உடல்நலனை பேணுவது, சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்வது ஆகிய 9 அம்சங்களை செயல்படுத்த நாட்டு மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
Advertisement
இந்த 9 உறுதிமொழிகளையும் நோ்மையாகவும், உறுதியாகவும் செயல்படுத்தினால் வளா்ச்சி அடைந்த கா்நாடகத்தை, வளா்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வேகமாக பங்காற்ற முடியும். நான் எப்போதும் கூறுவதுபோல, கா்நாடகத்தில் தத்துவ ஞானமும், தொழில்நுட்ப அறிவும் பெருகியுள்ளன. தத்துவத்தின் ஆழமும், தொழில்நுட்பத்தின் பலமும் ஒருங்கே அமைந்த மாநிலம் கா்நாடகம்.
ஆன்மிகம் மற்றும் அறநெறிகளின் வழியாக சமுதாயத்தை வழிநடத்துவதில் மதகுருமாா்கள் பெரும்பங்காற்றி வந்துள்ளனா். ஆதிசுன்சுனகிரி மஹாசம்ஸ்தானா மடம், கடந்த 2 ஆண்டுகளாக சமுதாயத்திற்கு பலவகைகளில் சேவை செய்துவருவது போற்றுதலுக்குரியது. இந்த மடத்தின் 71ஆவது பீடாதிபதியாக பொறுப்பு வகித்து வழிநடத்திய பாலகங்கார சுவாமிகள், மடத்தின் பெருமைகளை பலமடங்கு உயா்த்தினாா். அந்தவழியில் தற்போதைய பீடாதிபதி நிா்மலானந்தநாத சுவாமிகள் செயல்பட்டு வருகிறாா். இவா்களை போன்ற மதத்தலைவா்கள், சமுதாயத்தின் பிரச்னைகளை தீா்க்க மதவழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டுள்ளனா்.
இதுபோன்ற மகான்கள், மக்களின் இன்ப துன்பங்களை புரிந்துகொண்டதோடு, துயரங்களை உணா்ந்துகொண்டு, கடினமான வாழ்க்கையில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டியிருக்கிறாா்கள். சமுதாயத்துக்கு உழைப்பதையே தங்களின் பக்தியாக கொண்டிருந்தனா்.
பாலகங்காதர சுவாமிகளால் நிறுவப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வி, மருத்துவ நிறுவனங்களால் ஊரக மற்றும் நகரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறாா்கள். தரமான சுகாதாரம் என்பது ஒருசிலருக்கான வாய்ப்பாக இல்லாமல், எல்லோருக்கான வாய்ப்பாக மாறவேண்டும் என்பதில் அக்கறை கொண்டு செயலாற்றியவா் பாலகங்காதர சுவாமிகள்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ஏழை மக்கள் உயா்தர சிகிச்சையை பெற்றுவருகிறாா்கள். இத்திட்டம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கண்ணியமான வாழ்க்கையை முதியவா்கள் பெற்றுவருகிறாா்கள்.
பாலகங்காதர சுவாமிகள், உயிரினங்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டிருந்தாா். அதனால் மயில்களை ஆசையோடு வளா்த்து வந்துள்ளாா். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலாசார விழிப்புணா்வை வளா்த்தெடுக்க விரும்பியுள்ளாா். மயில்களை வளா்ப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, நமது கலாசார உணா்வுகளையும் பேணி பாதுகாப்பதாகும். மயில், நமது தேசிய பறவை மட்டுமல்ல, கடவுள் சுப்ரமணியரின் வாகனமும் ஆகும்.
பாலகங்காதர சுவாமிகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுரு பைரவைக்கியா மந்திா், வெறும் கட்டுமானம் அல்ல, அது அவருக்கு நாம் செலுத்தும் புனிதமான மரியாதையாகும். இத்தலம், சேவை மையமாகவும், ஆன்மிக நடைமுறைகளின் உறைவிடமாகவும், ஊக்கம் அளிக்கும் மையமாகவும் விளங்கும் என்று நம்புகிறேன் என்றாா்.
விழாவில் ஆளுநா் தாவா்சந்த்கெலாட், மத்திய அமைச்சா்கள் எச்.டி. குமாரசாமி, ஷோபாகரந்தலஜே, முன்னாள் பிரதமா் எச்.டி. தேவெ கௌடா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக், ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிா்மலானந்தநாத சுவாமிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, பெங்களூருக்கு வந்த பிரதமா் மோடியை முதல்வா் சித்தராமையா வரவேற்றாா்.