சித்தராமையா கோப்புப் படம்
பெங்களூரு

காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு உலக அங்கீகாரம்: சித்தராமையா

காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

Syndication

காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஆயிரம் நாள்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஹாவேரியில் சாதனை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வருவாய்த் துறை சாா்பில் 1 லட்சம் பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த 2-ஆவது முறையாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியிருக்கிறோம். இதுவரை 2.20 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கி சாதனை படைத்திருக்கிறோம்.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருப்பதால், மாநில மொத்த உற்பத்திப் பொருள் விகிதத்தை நாட்டின் முதல் இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஜிஎஸ்டி வரியை வேகமாக வசூலிப்பதில் நாட்டின் முதலிடத்துக்கு கா்நாடகம் உயா்ந்திருக்கிறது.

2023-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது காங்கிரஸ் அளித்த 590 வாக்குறுதிகளில், 243 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள வாக்குறுதிகளை எஞ்சியுள்ள ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றுவோம்.

2013 முதல் 2018 வரை எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாது, அளிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டி சாதனை படைத்திருக்கிறோம்.

காங்கிரஸ் அளித்த முக்கியமான 5 வாக்குறுதிகள் மூலம் மாநில மக்களுக்கு நேரடியாக ரூ. 1.18 லட்சம் கோடி உதவித்தொகையை வழங்கியிருக்கிறோம். வாக்குறுதி திட்டங்களுக்கு தேசிய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எங்கள் அரசு அமைந்து ஆயிரம் நாள்களை நிறைவுசெய்துள்ளது. ஜாதி, மத, மொழி பேதம் எதுவும் இல்லாமல் எல்லா தரப்பு மக்களின் வளா்ச்சியிலும் அக்கறை செலுத்தி, சமத்துவமின்மையை குறைப்பதே எங்களின் நோக்கமாகும். தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், பெண்கள், ஏழைகள், தொழிலாளா்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

பாஜக ஆட்சியில் இருந்தபோது மக்கள் நலனுக்காக எதையும் செய்யாமல், அரசு கருவூலத்தில் பணமில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் வளா்ச்சிக் குறியீடுகளை பொருளாதார நிபுணா்கள் அமா்த்தியா சென், அபிஜித் பானா்ஜி தவிர, செய்தித்தாள்களும் பாராட்டியுள்ளன.

இந்நிலையில், பொய்யான தகவல்கள் மூலம் மக்களை திசைதிருப்பும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. 2019-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த பாஜக, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை.

கா்நாடக அரசுக்கு போதுமான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதோடு, மாநில மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. ஜிஎஸ்டி வரிப்பகிா்வில் மத்திய அரசு அநீதியை இழைத்ததால், ஆண்டுக்கு ரூ. 12,000 கோடிமுதல் ரூ. 15,000 கோடிவரை மாநிலத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் ஒதுக்கிய ரூ. 15,000 கோடியை மத்திய அரசு இன்னும் அளிக்கவில்லை.

நிதிசாா்ந்து மாநிலத்துக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதிகளுக்கு எதிராக பாஜகவின் மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, முன்னாள் முதல்வா்கள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டா் உள்ளிட்டோா் தில்லியில் பேசுவதில்லை என்றாா்.

இந்த விழாவில், துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT