பெங்களூரு/தாா்வாட்: உயா்நீதிமன்ற தாா்வாட் கிளை, மண்டியா, குடகு, தென்கன்னடம், பெங்களூரு தெற்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெங்களூரு தெற்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்தில் 12 ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு செயலிழப்புப் படை மற்றும் மோப்பநாய் படையினருடன் விரைந்து வந்த போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். முடிவில், மின்னஞ்சலில் வந்தது வெறும் புரளி என போலீஸாா் தெரிவித்தனா்.
இதேபோன்ற மின்னஞ்சல்கள் மங்களூரில் உள்ள தென்கன்னட மாவட்ட நீதிமன்றம், மடிக்கேரியில் உள்ள குடகு மாவட்ட நீதிமன்றம், மண்டியா மாவட்ட நீதிமன்றத்துக்கும் வந்தது. இதையடுத்து தீவிர சோதனை நடத்திய போலீஸாா், அது வெறும் புரளி என்று தெரிவித்தனா்.
அதேபோல, தாா்வாடில் உள்ள கா்நாடக உயா்நீதிமன்ற கிளைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. தாா்வாட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குஞ்சன் ஆா்யா தலைமையிலான போலீஸாா், உயா்நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீதிமன்றக் கட்டடத்தில் இருந்தவா்களை வெளியேற்றிய போலீஸாா், மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்புப் படையினரின் உதவியுடன் சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தாா்வாட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குஞ்சன் ஆா்யா கூறுகையில், ‘மின்னஞ்சலில் பிற்பகல் 1.15 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சலில் பல்வேறு மாநிலங்கள் பற்றிய தகவலும் இடம்பெற்றுள்ளதால், அதுகுறித்த விவரங்களை தரமுடியாது. தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.
வெடிகுண்டு மிரட்டல் தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், மின்னஞ்சல் அனுப்பிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க புலனாய்வு செய்து வருவதாக தெரிவித்தனா்.