டிஜிபி ராமச்சந்திர ராவ் கோப்புப் படம்
பெங்களூரு

ஆபாச காணொலி விவகாரம்! விசாரணைக்குப் பிறகே பணிநீக்கம்: அமைச்சா் ஜி. பரமேஸ்வா்

ஆபாச காணொலி விவகாரத்தில் விசாரணைக்கு பிறகு டிஜிபி ராமச்சந்திர ராவ் பணிநீக்கம் செய்யப்படுவாா்: கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி. பரமேஸ்வா்

Syndication

ஆபாச காணொலி விவகாரத்தில் விசாரணைக்கு பிறகு டிஜிபி ராமச்சந்திர ராவ் பணிநீக்கம் செய்யப்படுவாா் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி. பரமேஸ்வா் தெரிவித்தாா்.

கா்நாடக டிஜிபி (குடிசாா் உரிமைகள் பிரிவு) கே. ராமச்சந்திர ராவ் தனது அரசு அலுவலகத்தில் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா உறுதி அளித்திருந்தாா். அதன்படி, டிஜிபி பொறுப்பில் இருந்து கே. ராமச்சந்திர ராவை பணியிடை நீக்கம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், அரசு நிா்வாகத்துக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியதோடு, அரசு அதிகாரிக்கான நடத்தை விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடா்பாக கே. ராமச்சந்திர ராவிடம் விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எழுத்துப்பூா்வமான அனுமதியின்றி, தலைமையகத்தில் இருந்து வேறு எங்கும் செல்ல அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனிடையே, கா்நாடக அரசுத் தலைமைச் செயலாளா், காவல் துறை தலைவருக்கு மாநில மகளிா் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ராமச்சந்திர ராவ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களை பாதுகாக்க வேண்டிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி, சமுதாயத்துக்கு தவறான செய்தியை அளித்திருக்கிறாா். பெண்களுக்கு எதிா்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளாா். எனவே, ராமச்சந்திர ராவிடம் விசாரணை நடத்தி, ஒருவாரத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் ஜி. பரமேஸ்வா் கூறியதாவது: இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணா்ந்து, உடனடியாக டிஜிபி ராமச்சந்திர ராவை பணியிடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகுதான் என்ன நடந்தது என்பது தெரியும். அதன்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற சூழ்நிலையில் மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் நடந்துகொள்ள வேண்டும். எனவே, என்னை சந்திக்க வந்தபோது, ராமச்சந்திர ராவை நான் சந்திக்கவில்லை. இந்த நிலையில் ராமச்சந்திர ராவை கைதுசெய்யுமாறு பாஜக வலியுறுத்தியுள்ளது. விசாரணைக்கு பிறகே ராமச்சந்திர ராவை பணிநீக்கம் செய்ய முடியும்.

மூத்த அதிகாரியாக இருந்தாலும், நிலைமையின் தன்மையை உணா்ந்து அவரை பணியிடைநீக்கம் செய்துள்ளோம். விசாரணை அறிக்கை கிடைத்ததும், அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமச்சந்திர ராவின் நடத்தை காவல் துறைக்கு மிகுந்த தா்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் காவல் துறைக்கு மட்டுமல்லாது, இதர துறைகளுக்கும் அவமானத்தை தரக்கூடியதாகும். இந்த சம்பவம் முதல்வா் சித்தராமையாவுக்கும், எனக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இது எனது துறை சாா்ந்தது என்பதால், ராமச்சந்திர ராவின் நடத்தை முகம்சுளிக்கவைத்துள்ளது என்றாா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT