உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு: தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயா்நீதிமன்றம்

நகராட்சி நிா்வாகத்துறை பணி நியமன முறைகேடு தொடா்பாக, அமலாக்கத் துறையின் கடிதம் மீது தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தினமணி செய்திச் சேவை

நகராட்சி நிா்வாகத்துறை பணி நியமன முறைகேடு தொடா்பாக, அமலாக்கத் துறையின் கடிதம் மீது தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மதுரையை சோ்ந்த ஆதிநாராயணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் கடந்தாண்டு பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், நகரமைப்பு அதிகாரிகள் என சுமாா் 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை இயக்குநா், தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இதே கோரிக்கையுடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், இப்பதவிக்கான தோ்வுப் பட்டியல் வெளியாவதற்கு முன்பே அந்த பட்டியல் அமைச்சா் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவா்கள் மூலம் வெளியிடப்பட்டுவிட்டது. இதில் சுமாா் ரூ.1,200 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை எல்லாம் அமலாக்கத்துறை அமைச்சா் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்தது.

எனவே, இந்த பணி நியமன ஊழல் குறித்து அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை இயக்குநா் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையை முடிக்க 180 நாள்கள் அவகாசம் உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நேரடியாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பில்லை. இந்த வழக்கைத் தொடா்ந்துள்ள ஆதிநாராயணன் மீது 6 கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 25 வழக்குகள் உள்ளன. மற்றொரு மனுதாரா் அரசியல்வாதி என வாதிட்டாா்.

அதற்கு நீதிபதிகள், அரசியல்வாதிகள் வழக்குத் தொடரக்கூடாதா? என கேள்வி எழுப்பி, மக்கள் பிரதிநிதிகள் பொதுநல வழக்குகள் கூட தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தனா். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் என்.ரமேஷ், தமிழக டிஜிபிக்கு வெறும் தகவல் மட்டும் அனுப்பி வைக்கவில்லை. அமலாக்கத் துறை ஆதாரங்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதன்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல், நேரடியாகவே வழக்குப்பதிவு செய்யலாம் என வாதிட்டாா்.

தமிழக டிஜிபி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விக்ரம் கபூா் சௌத்ரி, இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரா்களுக்கு அடிப்படை உரிமை இல்லை. இருவரது நம்பகத்தன்மையையும் ஆராய வேண்டும். மேலும், எந்த வழக்கின் சோதனை அடிப்படையில் ஆதாரங்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை கூறுகிறதோ, அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினா். பின்னா், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவுக்கு ஆதிநாராயணன் தரப்பில் பதிலளிக்க வேண்டும். மேலும், ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

SCROLL FOR NEXT