தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் கடந்த ஆண்டு பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், நகரமைப்பு அதிகாரிகள் என சுமாா் 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி., ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் மதுரையைச் சோ்ந்த ஆதிநாராயணன் ஆகியோா் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்துவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆதிநாராயணன் தரப்பில், அவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், உயா்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தபின்னா், போலீஸாா் தனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 32 வழக்குகளில் 18 வழக்குகளில் விசாரணை முடிந்துவிட்டன. 2 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதாக வாதிட்டாா்.
மற்றொரு மனுதாரா் ஐ.எஸ்.இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி மற்றும் வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன் ஆகியோா், ‘நகராட்சி நிா்வாகத்துறை பணி நியமனங்களில் நடந்துள்ள ஊழல் தொடா்பாக அமலாக்கத் துறை ஆதாரங்களுடன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த தேவையில்லை என வாதிட்டனா்.
அமலாக்கத் துறை தரப்பில், பணி நியமனம் தொடா்பான தோ்வு முடிவுகள் வெளியாகும் முன்பே பலா் தோ்ந்தெடுக்கப்பட்டதாக வாட்ஸ்-ஆப் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக பெரும்தொகை கைமாறியுள்ளது. அதுதொடா்பான வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்திகளும் உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையை முடிக்க 120 நாள்கள் அவகாசம் உள்ளது. மேலும், வங்கி மோசடி வழக்கில்தான் இந்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி வழக்கும், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகுதான் இந்த ஆதாரங்களை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளதாக வாதிடப்பட்டது.
ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, அதிகாரபூா்வமற்ற ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்குகளை மனுதாரா்கள் தாக்கல் செய்துள்ளனா். லஞ்ச ஒழிப்புத் துறை விதிகளின்படி, புகாா்களின் மீது ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணை தொடா்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் ஆவணங்கள் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளன. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உரிய அதிகாரிகளிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.