நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மனு மீது ஏப். 20 இல் விசாரணை
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறையின் மனுவை ஏப்.20-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறையின் மனுவை ஏப்.20-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி விசாரணை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதுகுறித்து அந்த நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ‘நேஷனல் ஹெரால்ட் விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு (எஃப்ஐஆா்) செய்யவில்லை. அவ்வாறு வழக்குப் பதிவு செய்வது பண முறைகேடு நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த வழிவகுக்கும்.
இதுபோல பதிவு செய்யப்பட்ட வழக்கை அடிப்படையாகக் கொள்ளாமல், தனிநபா் (பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி) அளித்த புகாரின் அடிப்படையில்தான் அமலாக்கத் துறை விசாரணை நடைபெற்றுள்ளது. எனவே, அதன் குற்றப்பத்திரிகையை சட்டப்படி ஏற்க முடியாது’ என்று தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த மனு மீதான விசாரணை ஏப். 20-ஆம் தேதி நடைபெறும் என்று உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து, ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாக குற்றஞ்சாட்டியது.
இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.