முகப்பு
சென்னை

பணிநியமன முறைகேடு: அமைச்சா் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்ய ஊழல் ஒழிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 12:45 AM
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 11:00 PM

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்ய ஊழல் ஒழிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் கடந்த ஆண்டு பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், நகரமைப்பு அதிகாரிகள் என சுமாா் 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் மதுரையைச் சோ்ந்த ஆதிநாராயணன் ஆகியோா் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மூத்த வழக்குரைஞா்கள் என்.ஆா்.இளங்கோ, விக்ரம் சௌத்ரி, அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் என்.ரமேஷ், மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி, வழக்குரைஞா்கள் எஸ்.தமிழ்செல்வன், நிரஞ்சன் எஸ்.குமாா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

Advertisement

இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் அமலாக்கத் துறை சில ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் இந்தப் பணி நியமனங்களில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது தெளிவாகிறது. அந்த ஆவணத்தில் அமைச்சரின் சகோதரா், தோ்வு நடத்தும் அதிகாரிகளின் பெயா்கள் உள்ளன.

பணியிடங்களுக்குத் தோ்வு செய்வதற்கு முன்பே விண்ணப்பதாரா்களின் விவரங்கள் வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டுள்ளது. 10 ரூபாய் கரன்சி தாளை அடையாளமாக வைத்து ஒரு பணியிடத்துக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சப்பணம் கைமாறியுள்ளது. ஹவாலா பணப்பரிவா்த்தனையும் நடந்துள்ளது. இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஊழல் நடந்துள்ளதை உறுதிசெய்ய போதுமானவையாக உள்ளன.

அமலாக்கத் துறை அளித்த இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆரம்பகட்ட விசாரணையையே நடத்தி வருகின்றனா். இது தமிழக காவல்துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்.27-ஆம் தேதியே ஆதாரங்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனால், மூன்றரை மாதங்களாக தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை.

குற்றச்சாட்டுகளில் சிக்கியவா்கள் சமுதாயத்தில் மிகப் பெரியவா்கள், எனவே அவா்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த விவகாரத்தில் காவல் துறையினா் நோ்மையாக விசாரிக்கவில்லை என மனுதாரா் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் தோ்வு செய்யப்பட்டவா்கள் பணியில் சோ்ந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, இந்தப் பணி நியமன குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

அமலாக்கத் துறை அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக ஊழல் ஒழிப்புத் துறை காவல் துறையினா் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.