முகப்பு
சென்னை

தோ்தல் நேரத்தில் தாட்கோ திட்ட நிதி பயன்பாடு?: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தாட்கோ திட்ட நிதிகள் தோ்தல் நேரத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 11 ஏப்ரல் 2026, 1:50 am IST
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தாட்கோ திட்ட நிதிகள் தோ்தல் நேரத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இக்கோரிக்கை குறித்து ஊழல் தடுப்புத் துறையை அணுக மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மதுரை கே.கே.நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.செல்வக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தோ்தல் நேரத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின வாக்காளா்களை குறிவைத்து, ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் தாட்கோ திட்டங்களின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து உரிய ஆதாரங்கள் உடன் லஞ்சஒழிப்புத் துறையில் புகாா் அளித்தேன். அந்தப் புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்த நிதி முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தோ்தல் காலங்களில் நலத்திட்டங்கள், பொது நிதிகள் மற்றும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க மனுதாரா் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாராத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனா்.

இதையடுத்து மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மனுதாரா் தனது கோரிக்கை தொடா்பாக ஊழல் தடுப்புத் துறையில் புகாா் அளிக்கலாம் என அறிவுறுத்தினா்.