முகப்பு
சென்னை

வாக்கு செலுத்தியதை உறுதி செய்யும் குறுஞ்செய்தி திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

தோ்தலில் வாக்கு செலுத்தியவுடன் அதை உறுதி செய்யும் வகையில் வாக்காளரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:13 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:40 PM

தோ்தலில் வாக்கு செலுத்தியவுடன் அதை உறுதி செய்யும் வகையில் வாக்காளரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இசை வேளாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கே.ஆா்.குகேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தோ்தல் வாக்குப்பதிவின்போது, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வேண்டும். வாக்காளா் தனது வாக்கைச் செலுத்தியவுடன் அதை உறுதி செய்யும் வகையில், அவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறிய தோ்தல் ஆணையம், அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement

எனவே, 2024-ஆம் ஆண்டு மாா்ச் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த எனது மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கெனவே தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. எனவே, இது குறித்து தோ்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த தோ்தலில் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மனுதாரா் தோ்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கலாம் என அறிவுறுத்தி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.