அமைச்சா் கே.என்.நேரு மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை? ஊழல் தடுப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? என ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? என ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் உதவி பொறியாளா், இளநிலைப் பொறியாளா், சுகாதார ஆய்வாளா் என சுமாா் 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. சுமாா் ரூ.634 கோடி வரை லஞ்சம் ஹவாலா பணமாக கைமாறியுள்ளதாக, தமிழக காவல் துறை டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில், அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்பு காவல் இயக்குநா் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கடந்த பிப். 20-ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவின்படி ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை எனக்கூறி, இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது உடனே வழக்குப் பதிய பிப். 20-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தும், அந்த உத்தரவை போலீஸாா் ஒரு மாத காலமாக அமல்படுத்தாமல் உள்ளனா். உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் அல்லது உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினா்.
அதற்கு அரசுத் தரப்பில், இந்தத் தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வந்துவிடும். மேலும், அமைச்சா் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17 (ஏ)-இன்படி முன் அனுமதி பெற வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய முன் அனுமதி தேவையில்லை என தெரிவித்தனா். பின்னா், வழக்கு விசாரணையை வரும் ஏப். 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.