தாவரவியல் புத்தகம் கிடைக்காமல் பிளஸ் 2 மாணவர்கள் அவதி
திருத்தணி, அக். 29: பள்ளிகள் திறந்து பல மாதங்கள் ஆகியும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தாவரவியல் புத்தகம் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கல்வி கேள்வ
திருத்தணி, அக். 29: பள்ளிகள் திறந்து பல மாதங்கள் ஆகியும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தாவரவியல் புத்தகம் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நடப்பு ஆண்டில், தாவரவியல் புத்தகம் இன்னமும் வழங்கப்படவில்லை.
இதனால் ஆசிரியர்களும் பாடம் நடத்த முடியால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கோடை விடுமுறைக்குப் பின், பள்ளிகள் அனைத்தும் ஜூன் முதல் தேதி திறக்கப்பட்டது. சில ஆண்டுகளாக பள்ளிகள் திறந்து சில நாள்களுக்கு பின் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஆனால் நடப்பு ஆண்டு முதல் புத்தகங்களை பள்ளிகள் திறக்கும் முன்னரே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக இம்முறை தமிழக அரசு தபால் துறை மூலம் நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளி திறக்கும் முன்னரே புத்தகங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 350-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் இதுநாள் வரையில் தாவரவியல் பாடப்புத்தகம் வழங்கப்படவில்லை.
இதனால் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கும் இம்மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
தற்போது காலாண்டுத் தேர்வு முடிந்து அரையாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையிலும் புத்தகம் வழங்கப்படாததால் மாணவர்கள் கடும் அவதிகுள்ளாகி உள்ளனர்.
முன்பெல்லாம் பள்ளிகளில் புத்தகம் தீர்ந்துவிட்டால், தனியார் புத்தகக் கடைகளில் புத்தகங்களை வாங்கிக் கொள்வர். ஆனால் அரசே சில ஆண்டுகளாக பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது.
இதனால் புத்தகங்கள் தற்போது தனியார் கடைகளில் கிடைப்பதில்லை என்றே கூறலாம். இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமாரி கூறியது: நடப்பு ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்களை நாங்கள் கொடுத்து விட்டோம். ஆனால் சில பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கையை சரியாக தரவில்லை. இதனால் ஒரு சில பள்ளிகளில் இந்த புத்தகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு தமிழக அரசு முதல் முறையாக தபால் துறை மூலமாக குடோனில் இருந்து நேரடியாகப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பியதால் சில பள்ளிகளில் புத்தகங்களை சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை.
தற்போது பள்ளிகளில் மீதமிருக்கும் (உபரி) புத்தகங்களை கொண்டு வந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். ஆதலால் இன்னும் சில தினங்களில் மாணவர்களுக்கு தாவரவியல் பாடப்புத்தகம் வழங்கப்படும் என அவர் கூறினார்.