திடக்கழிவு மேலாண்மையை விரைவில் செயல்படுத்த திட்டம்
திருவள்ளூர், ஏப். 20: திருவள்ளூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டத் தலைநகராக உள்ள திருவள்ளூர் முதல் நிலை நகராட்சி
திருவள்ளூர், ஏப். 20: திருவள்ளூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாவட்டத் தலைநகராக உள்ள திருவள்ளூர் முதல் நிலை நகராட்சி அந்தஸ்து பெற்றதாகும். மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோயில், நாயன்மார்களால் பாடல்பெற்ற தீர்த்தீஸ்வர சுவாமி கோயில், மாவட்ட அலுவலகங்கள், நீதிமன்றங்கள், ரயில் நிலையம், பல்வேறு கல்லூரிகள் உள்ளன.
நாள்தோறும் திருவள்ளூரில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு திருவள்ளூர் நகராட்சி சார்பில் 25 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. தலக்காஞ்சேரி கிராமத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுகின்றன.
தலக்காஞ்சேரி குப்பைக் கிடங்கு இப்போது முற்றிலும் நிரம்பி விட்டதால் மேற்கொண்டு குப்பைகளை அங்கு கொட்ட முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் அங்கு மக்கும், மக்காத குப்பைகளும் தரம் பிரிக்கப்படவில்லை. அருகே உள்ள ஈக்காடு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
புதிய குப்பைக் கிடங்கு
இதைக்கருத்தில் கொண்டு நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள நுங்கம்பாக்கம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து உரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையர் சரவணகுமார் கூறியது: நகரில் இப்போது 13 வார்டுகளில் குப்பைகள் வாரும் பணி தனியார் மூலமும், மீதமுள்ள வார்டுகளில் நகராட்சி மூலம் சேகரிக்கப்படுகிறது. தலக்காஞ்சேரி குப்பைக்கிடங்கு தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள குப்பைகளை தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். அமாவாசை நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
நகராட்சியின் வருவாயைப் பெருக்குவதற்காக அனைத்து வார்டுகளிலும் குப்பை வாரும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து நகர்மன்றம் மூலம் பரிசீலிக்கப்படும் என்றார்.