காஞ்சிபுரம், பிப். 4: காஞ்சிபுரத்தில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வரும் ஒக்கப்பிறந்தான் குளக்கரைப் பூங்காவை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ளது ஒக்கப்பிறந்தான் குளம். அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி காஞ்சிபுரம் நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.20 கோடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்கா ரூ.2.40 கோடி மதிப்பீட்டிலும், மஞ்சள் நீர் கால்வாயில் வெள்ளத் தடுப்புச் சுவர், ஒக்கப்பிறந்தான் குளத்தில் நடைபாதை, இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.2.58 கோடியும் ஒதுக்கப்பட்டது.
அதன்படி ஒக்கப்பிறந்தான் குளம் சீரமைக்கப்பட்டு குளத்தைச் சுற்றி நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக பூங்கா ஒளிமயமாகக் காட்சி அளித்தது. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் இப்போது இருக்கைகள் அமைந்துள்ள பகுதி சேறும் சகதியுமாக
மாறியுள்ளது.
சமீபத்திய புயல் மழையால் குளத்தில் நீரின் அளவு அதிகரித்து நடைபாதை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஜெனரேட்டர் அறையும் நீரில் மூழ்கியது. மின் விளக்கு பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பங்கள் பலவற்றை சமூக விரோதிகள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் இரவு நேரங்களில் இப்பூங்கா, சமூக விரோத செயல்களுக்கான களமாக மாறிவிட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் கூறுகையில், பெருநகர அந்தஸ்து பெற்ற காஞ்சிபுரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. மடம் தெருவில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்கா சரியாகப் பராமரிக்கப்படுவதால் குடும்பத்துடன் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
அதேபோன்று இக்குளத்தை சுற்றியுள்ள பூங்கா முறையாகப் பராமரிக்கப் படுமானால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார்.
18-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பழனி கூறுகையில், இக்குளம் பராமரிப்பு தொடர்பாக நகர்மன்றத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் அதைப் பார்வையிட்டு நீரில் மூழ்கி உள்ள ஜெனரேட்டர் அறையை மேல்பகுதியில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். குளத்தை சீரமைத்து மேம்படுத்துவது தொடர்பாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியிள்ளேன் என்றார்.
குளக்கரை பூங்கா திறக்கப்பட்டு ஓராண்டு கூட ஆகவில்லை. அதற்குள் பாழடைந்து நிலைக்கு மாறிவிட்டது. எனவே குளத்தைச் சுற்றி சுவர் எழுப்பி, கூடுதல் காவலர்களை நியமிக்க
வேண்டும்.
குளத்தை தூர்வாரி சிறிய அளவில் படகு விடுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும் என்று காஞ்சிபுரம் நகர மதிமுக இளைஞரணி துணை செயலர் வி.கே.பொன்மொழி வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.