லெவல் கிராஸிங் மீது மேம்பாலம்: தமிழகம் முழுவதும் அமைக்க ரயில்வே திட்டம்
ரயில்வே லெவல் கிராஸிங்கில் நிகழும் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த
ரயில்வே லெவல் கிராஸிங்கில் நிகழும் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லெவல் கிராஸிங் மீது மேம்பாலம் அமைக்கப்பட்டால் விபத்துகளும் தவிர்க்கப்படும், போக்குவரத்து சிக்கலும் ஏற்படாது என்பது ரயில்வே அதிகாரிகளின் கருத்தாகும். இதன்படி தமிழகத்தில் சுமார் 150 ரயில்வே லெவல் கிராஸிங் மீது மேம்பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
லெவல் கிராஸிங் மேம்பாலம் அமைப்பதற்கான செலவை ரயில்வே துறையும், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்தே மேற்கொள்ளும். தமிழகத்தின் பெரும்பாலான லெவல் கிராஸிங்கில் ஆள்கள் பற்றாக்குறை உள்ளது. சில இடங்களில் "கேட்' இல்லாத லெவல் கிராஸிங்கும் உள்ளன. இதன் காரணமாக அவ்வப்போது சிறு விபத்துகளும், பெரிய விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
Advertisement
இதற்கு நிரந்தரத் தீர்வு காணவே லெவல் கிராஸிங் மீது மேம்பாலமும், தேவைக்கு ஏற்ப சில இடங்களில் சுரங்கப் பாலமும் அமைக்கப்பட உள்ளது.
நடைபெற்று வரும் பணிகள்: கவரப்பேட்டை - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - எலாவூர், எலாவூர் - ஆரம்பாக்கம் இடையிலான ரயில்வே லெவல் கிராஸிங்குகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை - அரக்கோணம், சென்னை - கூடூர் வழித்தடங்களைச் சேர்த்து 14 லெவல் கிராஸிங் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
சென்னை - அரக்கோணம் வழித்தடம் : ஐ.சி.எஃப். லெவல் கிராஸிங், வில்லிவாக்கம் - கொரட்டூர் இரண்டு லெவல் கிராஸிங் சுரங்கப்பாலம், பட்டரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மொத்தமாக ரூ.86.1 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
சென்னை - கூடூர் வழித்தடம்: வியாசர்பாடி - கொருக்குப்பேட்டை இரண்டு லெவல் கிராஸிங் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாலம், திருவொற்றியூர் இரண்டு லெவல் கிராஸிங் மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாலம், வண்ணாரப்பேட்டை சுரங்கப்பாலம், விம்கோநகர் சுரங்கப் பாலம், அத்திப்பட்டு ரயில்வே கிராஸிங் மேம்பாலம்.
இந்தப் பணிகள் முடிப்பதற்கு ரூ 77.54 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகளை மேற்கொள்ள ரயில்வேயும், நெடுஞ்சாலைத்துறையும் முடிவு செய்துள்ளன.