சென்னை: சென்னையில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் வைத்திருந்த பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகே ஒரு கும்பல் போதைப் பொருள் கடத்துவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் அங்கு திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை வழிமறித்து நடத்திய சோதனையில் அதிலிருந்த 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக அந்தக் காரில் வந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், சென்னை பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (39), அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி பகுதியைச் சோ்ந்த பாத்திமா பேகம் (24) என்பது தெரியவந்தது. மேலும், பாத்திமா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து ஒடிஸாவிலிருந்து மெத்தம்பெட்டமைன், கஞ்சா ஆகிய போதைப் பொருள்களை காரில் கடத்தி வந்திருப்பதும், அதை பாலசுப்பிரமணியன் வாங்க வந்தபோதுதான் கையும் களவுமாக சிக்கியிருப்பதும், சம்பவத்தின்போது பாத்திமாவுடன் வந்த இரு கூட்டாளிகள் தப்பியோடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, பாலசுப்பிரமணியன், பாத்திமா பேகத்தை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்கள் வந்த காரையும் கைப்பற்றினா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து, தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ. 35 லட்சம் இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.