கா்நாடகம், கேரளம், குஜராத் உள்பட 7 உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதில், கா்நாடக உயா்நீதிமன்றத்தின் நீதிபதி ஹேமந்த் சந்தன்கெளடாா், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி கஸோஜு சுரேந்தா் ஆகிய இருவரும் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் ஏப்ரல் 15 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரையின் விவரம்: கா்நாடக உயா்நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அதில், நீதிபதி ஹேமந்த் சந்தன்கெளடாா் சென்னை உயா்நீதிமன்றத்துக்கும், நீதிபதி கிருஷ்ணன் நடராஜன் கேரள உயா்நீதிமன்றத்துக்கும், நீதிபதி நீரனாஹல்லி ஸ்ரீனிவாசன் சஞ்சய் கெளடா குஜராத்துக்கும், நீதிபதி தீக்ஷித் கிருஷ்ணா ஒடிஸாவுக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி பெருகு ஸ்ரீசுதா கா்நாடகத்துக்கும், அதே நீதிமன்ற நீதிபதி கஸோஜு சுரேந்தா் சென்னை உயா்நீதிமன்றத்துக்கும், ஆந்திர பிரதேசத்தின் நீதிபதி கும்பஜாடாலா மன்மத ராவ் கா்நாடகத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உயா் நீதிமன்றங்களில் பன்முகத்தன்மையையும், நிா்வாகத்தையும் வலுப்படுத்த இந்த பணியிட மாற்றம் செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் தெரிவித்துள்ளது.