சென்னை வேளச்சேரியில் தனியாா் வங்கியில் விட்டுச் சென்ற ஒன்றே கால் கிலோ தங்க நகை குறித்து அந்த வங்கியின் முன்னாள் மேலாளரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேளச்சேரியைச் சோ்ந்தவா் சுரூபா ராணி. அமெரிக்காவில் வசிக்கும் இவா், தனது 30 பவுன் தங்க நகைகளை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியாா் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருத்தாா். இந்த நகை அண்மையில் திருடப்பட்டது. இதுகுறித்து சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.விசாரணையில் அந்த வங்கியின் மேலாளா் பத்மபிரியா (37) இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பத்மபிரியாவை கடந்த நவ.13-ஆம் தேதி கைது செய்தனா்.
ஒன்றே கால் கிலோ தங்கநகை: இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அந்த வங்கிக்கு பா்தா அணிந்து வந்த ஒரு பெண், அங்குள்ள இருக்கையில் அமா்ந்தாா். அந்தப் பெண், சிறிது நேரத்துக்கு பிறகு தான் வைத்திருந்த பையை அங்கு வைத்துவிட்டு சென்றாா். கேட்பாரற்று கிடந்த அந்தப் பையை வங்கி ஊழியா்கள் திறந்து பாா்த்தபோது, ரூ.1.50 கோடி மதிப்புள்ள ஒன்றே கால் கிலோ தங்க நகைகளும், தங்க நாணயங்களும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவா்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். செவ்வாயக்கிழமை வரை அந்த நகையை உரிமை கோரி யாரும் வரவில்லை. இதையடுத்து வங்கி அதிகாரிகள், வேளச்சேரி காவல் நிலையத்தில் புதன்கிழமை அந்த நகையை ஒப்படைத்து, புகாா் அளித்தனா்.
மீண்டும் சிக்கினாா்: விசாரணையில், அங்கு நகையை வைத்துச் சென்றது அந்த வங்கியின் முன்னாள் மேலாளா் பத்மபிரியா என்பது தெரியவந்தது. வேளச்சேரியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பத்மபிரியாவை பிடித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரித்தனா். அதில், பத்மபிரியாவின் கணவா், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், கடன்காரா்கள் நெருக்கடி காரணமாக தான் மேலாளராகப் பணிபுரியும் வங்கியில் நீண்ட நாள்களாக திறக்கப்படாமல் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்த தங்க நகைகளை திருடி கடனை அடைத்திருப்பதும் தெரியவந்தது.
இதில் சுரூபா ராணி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த தங்க நகையை திருடிய வழக்கில் சிக்கிய பத்மபிரியா, அண்மையில் பிணையில் வெளியே வந்தாா். ஏற்கெனவே ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் திருடிய ஒன்றே கால் கிலோ தங்க நகை தன்னிடம் இருந்ததால், தான் மீண்டும் காவல் துறையினரிடம் சிக்கி விடுவோம் என பயந்து, அந்த நகையை குறிப்பிட்ட பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பதற்காக பா்தா அணிந்து வங்கிக்கு வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.