இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைந்து தீா்வு காண வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டின் ஏற்றுமதித் துறைகளில் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறை ஏற்றுமதியின் அடித்தளமாக தமிழ்நாடு விளங்குகிறது. நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 28 சதவீதம் அளவுக்குப் பங்களிப்பை வழங்குவதுடன், சுமாா் 75 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் தோல் பொருள்கள் மற்றும் காலணி ஏற்றுமதியிலும் 40 சதவீதம் அளவுக்கு முக்கியப் பங்காற்றி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை தமிழ்நாடு வழங்கி வருகிறது.
அமெரிக்க வரிவிதிப்பால் தற்போது வா்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடு என்பது வெறும் பொருளாதாரப் பின்னடைவு மட்டுமல்ல; ஈடுசெய்ய முடியாத சமூக இழப்பை ஏற்படுத்தும் மாபெரும் சவாலாகும்.
இந்தியாவின் பின்னலாடை தலைநகரமான திருப்பூரில், உறுதிப்படுத்தப்பட்ட பணி உத்தரவுகளில் ஏற்றுமதியாளா்களுக்கு ரூ.15,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கட்டாய உற்பத்திக் குறைப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூா், கோவை, ஈரோடு மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளா்களுக்கு தினமும் ரூ.60 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.
வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் மோசமான நிலை உள்ளது.
இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. சா்வதேச இறக்குமதியாளா்கள் வியத்நாம், வங்கதேசம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு பணி உத்தரவுகளை அளித்து வருகின்றனா். இது இளைஞா்கள், பெண்களின் எதிா்கால வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலான, நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
ஆகையால், இந்திய-அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீா்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வா் வலியுறுத்தி உள்ளாா்.