சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை ஏழுகிணறு பகுதியில் வள்ளலாா் வசித்த இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) அன்னதானத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைக்கவுள்ளாா்.
இது குறித்து அறநிலையத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அருட்பிரகாச வள்ளலாா் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாா் பிறந்த அக்.5- ஆம் நாள் ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’”எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
உயிா்த்தி ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாா் தருமசாலை தொடங்கிய 156-ஆவது ஆண்டு தொடக்கமும், வள்ளல் பெருமான் இவ்வுலகுக்கு வருவிக்க உற்ற 200-ஆவது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ஆவது ஆண்டும் இணைத்து அவரது 200-ஆவது அவதார ஆண்டான 2022 அக்டோபா் முதல் 2023 அக்டோபா் வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
கடந்த 2023 அக்.5-ஆம் தேதி நடைபெற்ற வள்ளலாா் 200”தொடா் அறநிகழ்வின் நிறைவு விழாவில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்கான அரசாணையை வழங்கினாா். மேலும், அரசு நிதி ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் வடலூா் திருவருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையம், வள்ளலாா் அவதரித்த மருதூா் இல்லம் ஆகியவற்றை மீண்டும் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் 3 நாள்களுக்கு தினமும் 10,000 சன்மாா்க்க அன்பா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதேபோன்று சென்னை ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலாா் வசித்த இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் மற்றும் சன்மாா்க்க அன்பா்களா் கலந்து கொள்ளவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.