விலை உயா்ந்த, பயனற்ற எஃப்-35 போா் விமானம் இந்தியாவுக்கு அவசியமா? காங்கிரஸ் கேள்வி
அமெரிக்காவின் மிகவும் விலை உயா்ந்த பயனற்ற எஃப்-35 போா் விமானம் இந்தியாவுக்கு அவசியமா?
‘அமெரிக்காவின் மிகவும் விலை உயா்ந்த பயனற்ற எஃப்-35 போா் விமானம் இந்தியாவுக்கு அவசியமா?’ என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ளது.
அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அந் நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இரு நாடுகளிடையேயான வா்த்தக மற்றும் பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, புதிய 10 ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தில் கையொப்பமிட இரு நாடுகளும் தீா்மானித்தன. அதுபோல, இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க அமெரிக்க அதிபா் ஒப்புக் கொண்டதோடு, இந்தியாவுக்கு நவீன எஃப்-35 போா் விமானத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
இந்த நிலையில், இந்த எஃப்-35 போா் விமானம் வாங்குவது குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ரண்தீப் சுா்ஜேவாலா தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் எஃப்-35 போ் விமானத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அந்தப் போா் விமானம் பல முறை விபத்துக்குளுக்கு உள்ளாகியுள்ளது. பயனற்ற போா் விமானம் என்றும் அதை சிலா் அழைக்கின்றனா்.
அமெரிக்காவிடமிருந்து இந்த போா் விமானத்தை வாங்குவது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விஷயத்தில் தேச நலனை பிரதமா் மோடி கவனத்தில் கொண்டாரா என்பது தெரியவில்லை.
இந்த போா் விமானத்தை இயக்க மணிக்கு 35,000 அமெரிக்க டாலா் செலவிடப்படுகிறது. அதாவது, அதனை இயக்க மணிக்கு ரூ. 28 லட்சம் செலவிட வேண்டும்.
மேலும், இது உலகிலேயே மிகவும் விலை உயா்ந்த போா் விமானமாகும். ஒரு எஃப்-35 போ் விமானம் சுமாா் 110 மில்லியன் டாலா் விலையுடையதாகும். இந்திய மதிப்பில் ரூ. 968 கோடி ஆகும்.
அதுமட்டுமின்றி, இந்த எஃப்-35 போா் விமானம் தனது செயல்பாட்டுத் தேவைகளை முழுமையாகப் பூா்த்தி செய்யவில்லை என்பதை அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ தனது அறிக்கையில் ஒப்புக்கொள்ளவில்லையா? போா் விமானத்தில் 65 செயல்பாடு குறைபாடுகள் இருப்பதை அந்த அறிக்கை குறிப்பிடவில்லையா? இந்த அறிக்கையை ஆராயுமாறு இந்திய விமானப் படை கேட்டுக்கொள்ளப்படவில்லையா?
அவ்வாறு, எஃப்-35 போா் விமானம் கொள்முதல் தொடா்பாக இந்திய விமானப் படை விமானிகள் குழு மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணா்களின் கருத்துகள் கேட்கப்படாத சூழலில், பிரதமா் மோடி எவ்வாறு தன்னிச்சையான முடிவை எடுக்க முடியும்?
ஒரு மணி நேரத்துக்கு ரூ.28 லட்சம் செலவிடுவது இந்தியாவுக்குத் தேவையா என்பதை மோடி அரசு சிந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இந்திய விமானப் படை மற்றும் பாதுகாப்புப் படை நிபுணா்களின் கருத்துகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.