108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18.35 லட்சம் போ் பயன்
அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.35 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா்.
சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.35 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். அதில் பிரசவகால மருத்துவ உதவிகள் மட்டும் 3.42 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன.
அதில், 303 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர மலைப் பகுதி மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்குச் செல்ல 40-க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 7,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள் குறித்து அதன் மாநில தலைவா் செல்வகுமாா், மண்டல தலைவா் முகமது பிலால் ஆகியோா் கூறியதாவது: 108 சேவையைப் பொருத்தவரை சென்னை உள்பட பல மாவட்டங்களில் அழைப்பு வந்த 7 நிமிஷங்களில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 18.35 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். அதில் பிரசவ சேவைகளுக்காக மட்டும் 3.42 லட்சம் வாகன சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, சாலை விபத்துகளில் சிக்கிய 3.53 லட்சம் போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
அதேபோல 1.17 லட்சம் இதய நோயாளிகளும், 1.08 லட்சம் நுரையீரல் நோயாளிகளும் 108 சேவை மூலம் பயனடைந்துள்ளனா். அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடா்ந்து உறுதி செய்து வருகிறோம் என்றனா்.