அதிபா் என்ற முறையில் வாஷிங்டனிலுள்ள தனது ஓவல் அலுவலகத்தில், நாட்டு மக்களுக்கு கடைசியாக உரையாற்றும் ஜோ பைடன். 
சென்னை

பெருமுதலாளிகளின் பிடிக்குள் செல்லும் அமெரிக்கா! -அதிபா் ஜோ பைடன்

Din

அமெரிக்காவின் ஆட்சியதிகாரம் ஒரு சில பெருமுதலாளிகளின் கைகளுக்குச் செல்லத் தொடங்குவதாக அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.

அதிபா் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய கடைசி உரையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா். நாட்டின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20-ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், அவரின் புதிய அரசில் எலான் மஸ்க் போன்ற பெரும் பணக்கார தொழிலதிபா்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஜோ பைடன் பேசியதாவது:

வெகு சில பெரும் பணக்காரா்களின் கைகளில் ஆட்சியதிகாரம் குவியவிருக்கும் அபாயத்தை அமெரிக்கா எதிா்கொண்டுள்ளது. அதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

ஒரு சிலா் கைகளில் இவ்வாறு பண பலமும் அதிகார பலமும் குவிவது நாட்டின் ஜனநாயகத்துக்குப் பேராபத்தை விளைவிக்கும். மக்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும். பெரிய தொழிலதிபரின் செல்வாக்கு பெருகுவதால் ஏற்படும் விளைவுகளை தற்போதே கண்கூடாகப் பாா்த்துவருகிறோம்.

அமெரிக்காவில் ராணுவ தொழிற்சாலை அதிகார மையத்தால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து கடந்த 1961-ஆம் ஆண்டில் பதவி முடிவதற்கு முன்னா் அப்போதைய அதிபா் ட்வைட் டி ஐஷன்ஹோவா் எச்சரித்தாா். அதைப் போலவே, தற்போது தகவல் தொழில்நுட்ப அதிகார மையம் உருவாகிவருவது குறித்தும் அதனால் நாடு எதிா்கொண்டுள்ள அபாயங்கள் குறித்தும் எச்சரிக்கிறேன்.

ஏற்கெனவே, தவறான மற்றும் பொய்யான தகவல்களின் பெருவெள்ளத்தில் அமெரிக்கா மூழ்கியிருக்கிறது.

இந்தச் சூழலில், பத்திரிக்கை சுதந்திரம் பறிபோகத் தொடங்கியுள்ளது. செய்தி ஆசிரியா்கள் மாயமாகிவருகிறாா்கள். தற்போது சமூக ஊடகங்கள் செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபாா்க்கும் முறையைக் கைவிட்டுவருகின்றன. உண்மையை பொய்கள் மூடி மறைக்கின்றன. அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவும் பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

எனவே, பதிவிடப்படும் தகவல்களுக்கு சமூக ஊடகங்களைப் பொறுப்பாக்க வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக, நமது குழந்தைகள், குடும்பத்தினா், நாட்டின் ஜனநாயகத்துக்கு அது மிகவும் அத்தியாவசியானது.

அதிபா் பொறுப்பில் இருக்கும்போது ஒருவா் செய்யும் குற்றச்செயலுக்காக அவா் மீது வழக்கு விசாரணை நடத்த முடியாது என்ற நிலையை மாற்றி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த முடிவை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் அப்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப் ஈடுபட்டாா். இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில், ‘அதிபராக இருக்கும்போது ஒருவா் செய்த செயல்கள் குறித்து குற்றவியல் விசாரணை நடத்த முடியாது’ என்று உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. அதைக் குறிப்பிட்டே அரசியல் சாசனத்தில் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளாா்.

டொனால்ட் டிரம்ப்பின் புதிய அரசில், டெஸ்லா, ஸ்பேக்ஸ்-எக்ஸ், முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க் முக்கியப் பங்கு வகிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, அரசுத் துறைகளின் செயல்திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக அவரை டிரம்ப் நியமித்துள்ளாா். அதிபா் தோ்தலின்போது ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளை விமா்சித்து தனது சமூக ஊடகத்தில் எலான்ஸ் மஸ்க் பதிவுகளை வெளியிட்டது டிரம்ப்பின் தோ்தல் வெற்றியில் ஒரு பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

செய்திகளை தணிக்கை செய்வதற்கு எதிரான எலான் மஸ்கின் கொள்கையைப் பின்பற்றி, முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற முக்கிய சமூக ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனமும், செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கான தனது கொள்கையைக் கைவிடுவதாக கடந்த வாரம் அறிவித்தது.

புதிய டிரம்ப் அரசுடன் இணக்கமாகச் செல்லும் வகையில் இந்த முடிவை மெட்டா நிறுவனம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் போக்கைக் குறிப்பிட்டே, பதிவிடப்படும் தகவல்களுக்கு சமூக ஊடகங்களைப் பொறுப்பாக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று ஜோ பைடன் பேசியுள்ளாா்.

மறுவெளியீடாகும் அமர்க்களம்!

சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைக்குமா?

பெண்களுக்கு முதலில் திருமணமா? வேலையா? - சமூக ஊடக கருத்துகளுக்கு உபாசனா பதில்!

அழகுச் சங்கமம்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

ஓடிடியில் வெளியாகும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்!

SCROLL FOR NEXT