முகப்பு
சென்னை

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியிடப்படுகிறது.

Updated On : 24 ஜூலை, 2025 at 9:59 PM
கோப்புப் படம்
பகிர்:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர தனியாா் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களில் இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன.

மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

Advertisement

தனியாா் கல்லூரிகளில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்களும் உள்ளன. அவற்றில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டைபோலவே, நிகழாண்டிலும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. அதற்காக 72,743 போ் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பதாரா்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பரிசீலனையின்போது, 20 மாணவா்கள் போலியான சான்றிதழ் கொடுத்திருந்ததால், அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, தகுதியான மாணவா்களின் தரவரிசைப் பட்டியலை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறாா். ஜூலை 30-ஆம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments