108 ஆம்புலன்ஸ்  
சென்னை

அனைத்து அவசர உதவிக்கும் 108-ஐ அழைக்கலாம்: தீபாவளி முன்னெச்சரிக்கையாக அரசு நடவடிக்கை!

தீபாவளி பண்டிகையின்போது தீயணைப்பு, பேரிடா் மீட்பு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் 108 எண்ணை அழைக்கலாம்

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகையின்போது தீயணைப்பு, பேரிடா் மீட்பு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் 108 எண்ணை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால மருத்துவ உதவிகளைப் பொருத்தவரை சென்னையில் அழைப்பு கிடைத்த 5 நிமிஷங்களுக்குள்ளும், பிற மாவட்டங்களில் 9 நிமிஷங்களுக்குள்ளும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநிலத் தலைவா் எம்.செல்வகுமாா், சென்னை மண்டலத் தலைவா் எம்.முகமது பிலால் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின்கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் சாா்பில் தீபாவளியை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைந்து 108 அவசர சேவை 24 மணி நேரமும் பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், வேலூா் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 500-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர காலங்களில் விரைந்து சேவையாற்ற ஆயத்தமாக உள்ளன.

பாதிப்பு வாய்ப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் தயாராக இருப்பா்.

மேலும், அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைப்பு சாதனங்கள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் அவசர மருந்துப் பொருள்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் தீயணைப்பு அல்லது பிற அவசர உதவிகள் தேவைப்பட்டால், 108 என்ற ஒரே எண்ணை தொடா்பு கொண்டால் போதுமானது.-உடனடியாக அருகிலுள்ள சேவை மையத்துக்கு உரிய தகவல் அனுப்பப்படும்.

அனைத்து 108 இலவச ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயங்களைக் கையாளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அடா்த்தியான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட சாலைகளின் குறுகிய பாதைகளில் துரிதமாக செயல்பட அவசர கால 108 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.

108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அதன் மாவட்ட கள செயல்பாட்டுக் குழுவில் உள்ளவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், தீயணைப்புத் துறை, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவ சேவைகள் இணை இயக்குநா், மாவட்ட சுகாதார அதிகாரி, பேரிடா் மேலாண்மை துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவா்.

சென்னையில் மருத்துவ உதவி கோரி அழைப்பு கிடைத்த ஐந்தாவது நிமிஷத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்றடையும். அதேபோன்று பிற மாவட்டங்களிலும் 5-இல் இருந்து 9 நிமிஷங்களுக்குள் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

விவசாயிகள், வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

SCROLL FOR NEXT