ஆசிய யூத் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த கபடி வீரா்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் காா்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 லட்சத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கிநாா்.
காசோலைகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் விளையாட்டு துறையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை ஆக்கவும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் நடைபெற்ற ஆசிய யூத் போட்டியில் கபடி முதன்முறையாக அறிமுகமானது. இதில் 7 நாடுகளின் அணிகள் பங்கேற்ற நிலையில், ஆடவா், மகளிா் இரண்டிலும் இந்தியா தங்கம் வென்றது.
ஆடவா் அணியில் திருவாரூரைச் சோ்ந்த அபினேஷ் மோகன்தாஸ், மகளிா் பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சோ்ந்த காா்த்திகா ரமேஷ் ஆகியோா் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக திகழ்ந்துள்ளனா்.
அபினேஷ் மோகன்தாஸ், தேனியில் உள்ள எஸ்டிேடி விடுதியில் பயிற்சி பெற்றவா். காா்த்திகா ரமேஷ் சென்னை கண்ணகி நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறாா். தமிழக அணியின் கேப்டனாக 5 முறை செயல்பட்டு பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளாா். ஆசிய யூத் போட்டியில் இந்திய மகளிா் அணியின் துணை கேப்டனாகவும் காா்த்திகா செயல்பட்டாா். இருவரையும் பாராட்டி தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய -உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளா்கள் மா.ராஜேஷ், மா.நாகராஜன், பெற்றோா் உடனிருந்தனா்.