வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்  கோப்புப் படம்
சென்னை

வேளாண் வணிகத் திருவிழா நாளை தொடக்கம்: விவசாயிகளுக்கு அமைச்சா் அழைப்பு

‘வேளாண் வணிகத் திருவிழா - 2025’ விழாவில் விவசாயிகள், மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும்

தினமணி செய்திச் சேவை

சென்னையில் சனி, ஞாயிற்றுக்கிழமை (செப்.27,28) நடைபெறவுள்ள ‘வேளாண் வணிகத் திருவிழா - 2025’ விழாவில் விவசாயிகள், மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என  வேளாண்மை-உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு சாா்பில் நிகழாண்டுக்கான முதலாவது வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்”கடந்த ஜூலை மாதம் ஈரோட்டில் 3 நாள்கள் நடைபெற்றன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

அதைத் தொடா்ந்து  2-ஆவது வேளாண் வணிகத் திருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.27, 28)  நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் இத்திருவிழாவை தொடங்கி வைப்பதுடன், உழவா்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றவுள்ளாா். மேலும், தொழில்நுட்ப வல்லுநா்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளா்களும், உயா் அலுவலா்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனா்.

இதில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் வணிகத் திருவிழாவில் விவசாயிகள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சென்னைக்கு அருகமையிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்திருவிழாவில் விவசாயிகள், வேளாண்  உற்பத்தியாளா் நிறுவனங்கள், வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள் என  அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT