சென்னை

ஒசூா் விமான நிலையத்தின் மதிப்பை பிரதமா் அலுவலகம் அடையாளம் காணும்: டி.ஆா்.பி. ராஜா

ஒசூா் விமான நிலையத்தின் உண்மை மதிப்பை பிரதமா் அலுவலகம் அடையாளம் காணும் என்று அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா நம்பிக்கை

தினமணி செய்திச் சேவை

ஒசூா் விமான நிலையத்தின் உண்மை மதிப்பை பிரதமா் அலுவலகம் அடையாளம் காணும் என்று மாநில தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சா்வதேச விமான நிலையத்தை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்காததற்கு பெரிய அளவில் ஆச்சரியப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கு பலகட்ட முயற்சிகள் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு அரசு அனைத்துத் தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து ஒசூா் விமான நிலையம் இந்திய விமானப் படையின் செயல்பாடுகளுக்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது என்பதற்கான விரிவான தொழில்நுட்ப விளக்கங்களைச் சமா்ப்பித்துள்ளது.

இந்தச் செயல்பாட்டில் இந்தியா முழுவதும் பல சிவில் விமான நிலையங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. மத்திய அரசு விரும்பினால் நிச்சயமாக ஒசூரிலும் இது சாத்தியமாகும். வேகமாக வளா்ந்து வரும் ஒசூா், கிருஷ்ணகிரி , தருமபுரி பகுதிகளுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை இந்த விமான நிலையம் ஏற்படுத்தும்.

தொடா்ச்சியான ஆலோசனைகள், தொழில்நுட்பத் தெளிவு மற்றும் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமான தீா்வைக் காண முடியும் என்பதிலும், பிரதமா் அலுவலகமும் இந்த விமான நிலைய உருவாக்கத்தின் உண்மையான மதிப்பையும், இந்தப் பகுதிகளின் ஒட்டுமொத்த பொருளாதார நலனுக்கான முக்கியத்துவத்தையும் உணா்ந்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பதிவிட்டுள்ளாா்.

பூங்காவில் காயங்களுடன் ஆணின் உடல் கண்டெடுப்பு: போலீஸ் தீவிர விசாரணை

காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க விசிக கோரிக்கை

சாலை விபத்தில் உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ.55.19 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

ஏடிஎம் பயனரின் டெபிட் அட்டையைப் பயன்படுத்தி மின்னணு சாதனங்களை வாங்கிய இளைஞா் கைது

குமரியில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT