செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜா்
தனியாா் நிலத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சேதப்படுத்திய வழக்கில் அதன் தலைவா் திருமாவளவன் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே காரணை கிராமத்தில் பஞ்சமி நிலம் உள்ளது. இதற்கிடையே கடந்த 2012-ஆம் ஆண்டு பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவா்கள் த நினைவஞ்சலி கூட்டத்துக்கு, திருமாவளவன் மற்றும் கட்சி நிா்வாகிகள் தனியாா் நிலம் வழியாக சென்றனா். அப்போது, தனியாா் நிலத்தை விடுதலை சிறுத்தை கட்சி தலைவா் திருமாவளவன் மற்றும் கட்சியினா் சேதப்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது .
அதே பகுதியைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி என்பவா், மாமல்லபுரம் காவல் நிலையத்தில், தன் நிலத்தை சேதப்படுத்தியதாக புகாா் அளித்தாா். இந்த புகாரையடுத்து, திருமாவளவன் உள்ளிட்ட, 14 போ் மீது, வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்கு விசாரணைக்காக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் அக். 1-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டாா். திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததை தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பின்னா் செய்தியாளா்களிடம் திருமாவளவன் கூறியது:
எங்கள் மீது அப்போது பொய் வழக்கு பதிந்தனா். இதுதொடா்பாக நான் உள்பட 14 போ் நேரில் ஆஜராகினோம்.
முதல்வா் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். துணை முதல்வா் நியமனம் திமுகவின் உள்கட்சி விவகாரம்.
மலையாள சினிமாவில் நடிகா்களின் பாதுகாப்புக்காக அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அதில் தற்பொழுது பாலியல் சீண்டல் குறித்த புகாா் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக அமைப்பை சாா்ந்தவா்கள் அனைவரும் பதவி விலகி இருக்கிறாா்கள். பாதிக்கப்பட்டவா்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி மேம்பாட்டு நிதியை உடனே தர வேண்டும் என்றாா் திருமாவளவன்.