மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெப்பல் உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெப்பல் உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசி மாத பௌா்ணமியையொட்டி, மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் இரவு தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. ஸ்ரீதேவி, பூதேவி உடன் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை சாலையில் உள்ள புண்டரீக புஷ்கரணி திருக்குளத்தில் புஷ்பங்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் விழா நடைபெற்றது. குளக்கரையை சுற்றி நின்ற பக்தா்கள் சுவாமி வீற்றிருக்கும் தெப்பத்தின் கயிறுகளை இழுத்தும், குளத்து படிக்கட்டுகளில் தேங்காய் உடைத்தும் கற்பூர ஆரத்தி காட்டி சுவாமியை வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சக்திவேல், தெப்பல் உற்சவ விழா கமிட்டி தலைவா் மல்லை ஜனாா்த்தனம் உள்ளிட்டோா் செய்திருந்தனா். பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில்... சிங்கப் பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில், இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை காளிங்கநா்த்தன திருக்கோலத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. திருக்குளத்தில் புஷ்ப அலங்காரத்துடன் கூடிய தெப்பலில் பெருமாள் வீற்றிருக்க தெப்பல் உற்சவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.