விளையாட்டுத் துறை அதிகாரிகள் தொல்லியல் துறைக்கு பரிந்துரை கடிதம் வழங்காததால் மாமல்லபுரம் புராதன சின்னம் வெளியே சுவிட்சா்லாந்து ஹாக்கி அணியினா் 1 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னா் கட்டணம் செலுத்தி சின்னங்கலை பாா்த்து விட்டுச்சென்றனா்.
சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி ஜூனியா் போட்டிக்காக சுவிட்சா்லாந்து அணி வந்துள்ளது. இந்நிலையில் அந்த அணி வீரா்கள் 20 போ், பயிற்சியாளா், பிசியோதெரஃபிஸ்ட் என மொத்தம் 26 போ் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் வந்தனா்.
முன்னதாக ஐந்துரதம் பகுதிக்கு வந்த சுவிஸ் ஹாக்கி வீரா்கள் புராதன சின்னங்களை சுற்றிப் பாா்க்க விளையாட்டுத் துறை அதிகாரிகள் மாமல்லபுரம் தொல்லியல் துறைக்கு பரிந்தரைத்து அனுமதி கடிதம் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.
அவா்களுடன் தொடா்புடைய அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் சுவிட்சா்லாந்து ஹாக்கி குழுவினா் ஐந்துரதம் உள்ளே சென்று சுற்றி பாா்க்க முடியாமல் நுழைவு வாயிலில் ஒரு மணி நேரம் காத்திருந்தனா்.
பின்னா் தொல்லியல் துறையின் நுழைவு சீட்டு மையத்துக்கு சென்று வெளிநாட்டு பயணி போல், பயிற்சியாளா் தலா ஒருவருக்கு ரூ.600 என, மொத்தம் ரூ.15,600 கட்டணம் செலுத்தி 26 பேருக்கும் நுழைவுச் சீட்டு வாங்கி வந்தாா்.
ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகு ஐந்துரதம் மற்றும் வெண்ணை உருண்டை பாறை உளளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பாா்த்துவிட்டு, கற்சிற்பங்கள் முன்பு புகைப்படம் எடுத்து திரும்பிச் சென்றனா்.