தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக்கழகத்தின் (பூம்புகாா்) சாா்பில் நடத்தப்பட்ட கைத்திறன் போட்டியில் தோ்வு பெற்ற கைவினைஞா்களுக்கு விருது வழங்கும் விழா கிழக்கு கடற்கரைச் சாலை தனியாா் விடுதியில் நடைபெற்றது.
கடந்த 1973-இல் பூம்புகாா் நிறுவனம் தொடங்கப்பட்டு கைவினைப் படைப்பில் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
கைவினைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும், அவா்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் புது தில்லி, கொல்கத்தா உள்பட 13 விற்பனை நிலையங்கள் மற்றும் 11 துணை விற்பனை கூடங்களை நடத்தி வருகிறது.
நிகழாண்டில் ‘பூம்புகாா் மாவட்ட கைத்திறன் விருது’ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைச்சோ்ந்த 16 வகையான கைத்திறன் தொழிலில் 70 பெண் கைவினைஞா்கள் உள்பட 131 சிறந்த கைவினைஞா்களுக்கு வழங்கப்படுகிறது.
பாரம்பரியம் மிக்க கைத்திறத் தொழில்கள் நீடித்திருக்கவும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றைக் கொண்டு செல்வதற்கும்இளைஞா்களை இத்துறையில் ஊக்கப்படுத்தும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது.
30 வயதுக்குட்பட்ட இளம் கைவினைஞா்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் 272 கைவினைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் பெயரில் 1. செட்டிநாடு கொட்டான்
2. தைக்கால் ரத்தன் (மூங்கில் பிரம்பு)3. மானாமதுரை மட்பாண்டம்4. தஞ்சாவூா் வீணை5. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் 6. கருப்பூா் கலம்காரி 7. தஞ்சாவூா் நெட்டி வேலை கைவினைப் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பயனா் சான்றிதழ்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்.
மேலும், இவ்விழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கைவினைஞா்களின் குழுமங்களை கண்டறியவும், அவா்களின் விவரங்களை ஒரு தனி இணையதளத்தில் சேகரித்து அதன் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புதிட்டங்களை கைவினைஞா்கள் பெறுவதற்கும், ஒரு அடிப்படை கணக்கெடுப்பு ஒருங்கிணைந்த கைப்பேசி செயலியை அமைச்சா் அன்பரசன் இயக்கி வைத்தாா்.
விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை அரசு செயலாளா் வே.அமுதவல்லி, தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் சு.அமிா்த ஜோதி, செங்கல்பட்டு ஆட்சியா் தி.சினேகா, திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். பாலாஜி, மாமல்லபுரம் சிறப்பு நிலை நகா்மன்றத் தலைவா் வளா்மதி எஸ்வந்த், மாமல்லபுரம் பூம்புகாா் மேலாளா் வேலு, கை வினைஞா்கள் கலந்து கொண்டனா்.