எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கவுன்சலிங் எப்போது?
எம்.பி.பி.எஸ். படிப்பில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப இந்த மாத இறுதியில்...
சென்னை, ஆக. 9: எம்.பி.பி.எஸ். படிப்பில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப இந்த மாத இறுதியில் இரண்டாம் கட்ட கவுன்சலிங் நடைபெறுகிறது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியை இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் இதுவரை மூன்று முறை ஆய்வு செய்து விட்டனர். இதையடுத்து மாணவர்களைச் சேர்க்கும் அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் நிராகரித்து, அதன் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டது.
எனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க முடியும் என்ற இழுபறி நிலை நீடிக்கிறது.
14 காலியிடங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உள்பட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 283 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் முதல் கட்ட கவுன்சலிங்கின்போது (ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை) மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
முதல் கட்ட கவுன்சலிங்கின்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 1,398 மாணவர்களில், 14 பேர் பி.இ. உள்பட வேறு படிப்புகளில் சேர்ந்ததால் காலியிடம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காலியிடம் இல்லை: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் முதல் கட்ட கவுன்சலிங்கில் அனுமதிக் கடிதம் பெற்ற அனைத்து மாணவர்களும் சேர்ந்து விட்டதால், இவற்றில் காலியிடம் இல்லை. கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 1 காலியிடம், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2 காலியிடங்கள், தஞ்சாவூர் - தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்கள் என மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளன.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்...: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் நான்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதாக கல்லூரி நிர்வாகங்களிடமிருந்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு தகவல் வந்துள்ளது.
மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் 2 காலியிடங்களும் (ஒரு இடத்துக்குக் கட்டணம் ரூ.2.5 லட்சம்), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 2 காலியிடங்களும் (ஒரு இடத்துக்குக் கட்டணம் ரூ.2.30 லட்சம்) ஏற்பட்டுள்ளன. இந்தக் காலியிடங்களும் இரண்டாம் கட்ட கவுன்சலிங்கின்போது நிரப்பப்படும்.
மாத இறுதி ஏன்? ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரியின் மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகும்.
மத்திய சுகாதார மருத்துவத் துறையின் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இப்போது நடைபெற்று வரும் 2-ம் கட்ட கவுன்சலிங், வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே அகில இந்திய ஒதுக்கீட்டு 2-ம் கட்ட கவுன்சலிங் முடிந்து ஏற்படும் காலியிடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள 14 காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள 4 காலியிடங்கள், மதுராந்தகத்தில் தொடங்கப்படும் புதிய சுயநிதி "கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரி' மூலம் கிடைக்கும் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், திருச்சியில் தொடங்கப்படும் "சென்னை மருத்துவக் கல்லூரி' மூலம் கிடைக்கும் 97 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு 2-ம் கட்ட கவுன்சலிங்கின்போது மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
காலியிடங்கள் அனைத்தையும் முழுமையாக மதிப்பீடு செய்து நிரப்ப வசதியாகவே மாத இறுதியில் 2-ம் கட்ட கவுன்சலிங் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்ப்பை முடிக்க வேண்டும்.