இரவு 10 மணிக்குப் பின் "கிராமமாக' மாறும் சென்னை!
சென்னை, ஜூலை 21: சென்னை புறநகர் பகுதிகளுக்கு 24 மணி நேர சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்கள் கூட "தூங்காத நகரங்களாக'
சென்னை, ஜூலை 21: சென்னை புறநகர் பகுதிகளுக்கு 24 மணி நேர சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்கள் கூட "தூங்காத நகரங்களாக' விடிய, விடிய போக்குவரத்து வசதியுடன் உள்ளன. ஆனால், சென்னை மாநகர், தினமும் இரவு 10 மணிக்குப் பின் போதிய போக்குவரத்து வசதியின்றி "குக்கிராமம்' போல மாற்றப்பட்டு வருகிறது.
இரவில் துண்டிக்கப்படும் புறநகர் பகுதிகள்...
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு -தாம்பரம் -எழும்பூர் -கடற்கரை மார்க்கத்தில் புறநகர் மின் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் 1932- 33-ம் ஆண்டில் புறநகர் மின் ரயில்களின் சேவை இயக்கப்பட்ட போது, தினமும் 11,800 பேரை சுமந்து சென்றன.
இப்போது, புறநகர் மின் ரயில்களில் தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டியுள்ளது.
புறநகர் வழித்தடங்கள் அனைத்தும் அகலப் பாதைகளாக மாற்றப்பட்ட பின் மீட்டர்கேஜ் ரயில்களுக்கு "விடை' கொடுக்கப்பட்டது.
புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், விரிவாக்கப் பணிகள், பாதுகாப்புக்கு தெற்கு ரயில்வே முன்னுரிமை தருகிறது.
அதிகரிக்கப்படாத ரயில் சேவை:
ஆனால், அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புறநகர் ரயில் சேவைகளை அதிகரிக்கவில்லை என்பது நீண்டகால குற்றச்சாட்டு.
பொதுவாக 9 பெட்டிகள் கொண்ட ரயிலில் 2,800 பயணிகளும், 12 பெட்டிகள் கொண்ட ரயிலில் 3,700 பேரும் பயணம் செய்யலாம்.
ஆனால், ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் போதிய ரயில் சேவையை இயக்க இயலவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.
கடற்கரை-எழும்பூர்- தாம்பரம்- செங்கல்பட்டு (திருமால்பூர் உள்பட) வழித்தடத்தில் தினமும் 216 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், இது இப்போது 190-ஆக குறைக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இது மேலும் குறைக்கப்படுகின்றது.
சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடம் புறக்கணிப்பு?
இதேபோல சென்ட்ரல்- ஆவடி- திருநின்றவூர்- அரக்கோணம் மார்க்கத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின் ரயில்களின் சேவை குறைந்த எண்ணிக்கையில் (தினமும் 180 ரயில்கள்) இயக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து மின் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
முக்கிய நேரங்களில் (காலை 7 முதல் 9 மணி, மாலை 5.30 முதல் 7.30 மணி வரை) கூட புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்படவில்லை.
பெண்களுக்கு ஒதுக்கப்படும் பெட்டிகளும் அதிகரிக்கப்படவில்லை. இந்த ரயில்களில் தினமும் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனால் தெற்கு ரயில்வேயின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரவில் தூங்கும் மின் ரயில்கள்: சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், திருமுல்லைவாயில், பட்டரவாக்கம், பட்டாபிராம், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலைகள், தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளனர். மேலும் புதிது புதிதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கணிசமான அளவில் இயங்கத் தொடங்கியுள்ளன.
இதனால் "ஷிப்ட்' முறையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், அலுவலர்கள் புறநகர் மின் ரயில்களை நம்பியுள்ளனர்.
ஆனால், இந்த வழித்தடத்தில் இரவு 11 மணிக்கு மேல் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.
இரவு பஸ் சேவையின்றி தவிக்கும் பயணிகள்:
அம்பத்தூரில் இருந்து பிராட்வே, பெரம்பூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களுக்கு இரவு நேரத்தில் போதிய பஸ் சேவை, "ஷேர்' ஆட்டோ இல்லாமல், மக்கள் தினமும் தவிக்கின்றனர்.
இதற்கு மாற்றாக தினமும் இரவு 10 மணிக்குப் பின்னர் "ஓய்வெடுக்கும்' மின் ரயில்களை, இரவு நேர சிறப்பு ரயில்களாக இயக்க வேண்டும். இதன் மூலம் வருவாயும் அதிகரிக்கும். தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கும் என தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.