முகப்பு
சென்னை

கோப்புகள் இனி இல்லை: "எல்காட்'டில் புதிய முறை

சென்னை, ஜூன் 6:     "எல்காட்' நிறுவனத்தின் பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதியிலிருந்து கம்ப்யூட்டர் மயமாகின்றன.   ஆந்திரப்பிரதேச மாநில அரசின் தொழில்நுட்ப சேவை, இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.   தலைமைச்

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:14 PM
பகிர்:

சென்னை, ஜூன் 6:     "எல்காட்' நிறுவனத்தின் பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதியிலிருந்து கம்ப்யூட்டர் மயமாகின்றன.

  ஆந்திரப்பிரதேச மாநில அரசின் தொழில்நுட்ப சேவை, இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

  தலைமைச் செயலகம் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் கோப்புகள் எழுதப்பட்டு, அவை உயரதிகாரிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

  பெரும்பாலான துறைகளில் இந்தப் பணி செய்யும் ஊழியர்கள் அதிக அலட்சியம் காட்டுவதாகப் புகார்கள் எழுவதுண்டு. பல மாதங்களாக ஒரு கோப்பு தேங்கிக் கிடங்கும் நிலையும் உண்டு. இந்த நிலையில், கோப்புகளை காகிதம் இல்லாமல் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வரும் முயற்சியை "எல்காட்' நிறுவனம் தனது துறையில் மேற்கொண்டுள்ளது.

  ""பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் இதுபோன்ற முயற்சி, கடந்த 2001-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கோப்புகளை எழுதுவது, சரி செய்வது அதை அப்படியே உயரதிகாரிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகள் கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் கோப்புகள் அனைத்தும் காகித முறைக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் கம்ப்யூட்டர் முறையை அமலுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகிறோம்'' என்றார் "எல்காட்' நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரி.

  எங்கிருந்தாலும் பார்க்கலாம்...  கோப்புகள் கம்ப்யூட்டருக்கு மாற்றப்படும்போது, உயர் அதிகாரிகள் அதை எங்கிருந்தாலும் பார்க்கலாம்.

   உயரதிகாரிகள் வெளியூர் சென்றாலும் கம்ப்யூட்டர் மூலம் கோப்புகளைத் தருவித்துப் பார்க்கலாம். காகித முறை என்றால், கோப்புகளைக் கையில் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியிருக்கும்.

  அரசு அலுவலகங்களில் கோப்புகளை அலுவலக உதவியாளர் கொண்டு வந்து வைக்கும் வரை ஊழியர்கள் காத்திருப்பர்.

  இதனால், கால விரயமும், பணியில் சுணக்கமும் ஏற்படும். கம்ப்யூட்டரில் கோப்புகள் அனைத்தும் மாற்றப்பட்டால் யாருடைய உதவியுமின்றி அதிகாரிகள் அதைப் பார்க்கலாம் என்கின்றனர் "எல்காட்' அதிகாரிகள்.

  இந்த மாத இறுதிக்குள்...  தனது கோப்புகள் உள்பட அனைத்து நடைமுறைகளையும் கம்ப்யூட்டருக்கு மாற்றும் பணியில் "எல்காட்' நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

  ஜூன் 15-ம் தேதி இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

  பொதுவாக, கையால் எழுதப்படும் கோப்புகளில் கையெழுத்து புரியாததால் சிலவற்றுக்கு விளக்கம் கேட்க நேரிடலாம். கணினி கோப்புகளில் அந்தக் குறைபாடு இல்லை.

  புள்ளிவிவரங்களையும் வரைபடங்களையும் தேவைப்படும் இவை போன்ற தகவல்களையும் கோப்புகளில் இணைப்பது எளிது.

  மேல் அதிகாரிகள் போன்ற, அதிகாரம் பெற்ற சிலர் மட்டுமே கோப்புகளை தருவித்துப் பார்க்க முடியும் என்பதால் கோப்புகளின் ரகசியம் தொடர்ந்து காப்பாற்றப்படும். கோப்புகளை லேப்-டாப் போன்ற கருவிகள் மூலம் அதிகாரிகள் தங்களுடைய முகாம் அலுவலகங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும்கூட பார்க்க முடியும் என்பதால் முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

  மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் இப்போது இத்தகைய நிர்வாக நடைமுறையைக் கையாளத் தொடங்கிவிட்டன. அரசு அலுவலகங்களும் படிப்படியாக இதற்கு மாறினால் "சிவப்பு நாடா' முறையே காலப்போக்கில் மறைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.