முகப்பு
சென்னை

மாதிரி ரயில் நிலையமாகிறது சென்ட்ரல்!

சென்னை, நவ. 18:  அதிநவீன வசதிகளுடன் உலக தரத்தில் "மாதிரி ரயில் நிலையமாக' சென்னை சென்ட்ரல் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளது.   பொதுத்துறை மற்றும் தனியாரின் துறையினரின் கூட்டு ஒத்துழைப்புடன் ரூ. 500 கோடி

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:22 PM
பகிர்:

சென்னை, நவ. 18:  அதிநவீன வசதிகளுடன் உலக தரத்தில் "மாதிரி ரயில் நிலையமாக' சென்னை சென்ட்ரல் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளது.

  பொதுத்துறை மற்றும் தனியாரின் துறையினரின் கூட்டு ஒத்துழைப்புடன் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. ரயில்வே துறையுடன் மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் இதுதொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

  மக்களின் சேவையை 100 ஆண்டுகளுக்கு மேல் தொடரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நான்கு பிளாட்பாரம் மற்றும் அரக்கோணம் வரையிலான 2 அகலப் பாதைகளுடன் கூடியதாக கடந்த 7-4-1873-ல் திறக்கப்பட்டது. தற்போது இங்கு 14 பிளாட்பாரங்கள் உள்ளன.

மரபுச் சின்னம்:  நாட்டின் பாரம்பரிய மரபுச் சின்னமாக சென்ட்ரல் ரயில் நிலையம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பில் 136 அடி உயர மணிக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

  தமிழகம், கேரளத்தில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பிரதான கேந்திரமாக விளங்குகிறது.

  இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். 90-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்ட்ரலில் இருந்து தினமும் இயக்கப்படுகின்றன.

  இதன் பழைமைச் சிறப்பு மாறாத வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் புதிய பிரம்மாண்ட கட்டடத்துடன் ரூ. 500 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்து முனையமாகிறது "சால்ட்கோட்டர்ஸ்'   சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இணைப்பு "டெர்மினல்' (முனையம்) ரயில் நிலையமாக "சால்ட்கோட்டர்ஸ்' ரயில் நிலையத்தையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இப்போது சரக்கு நிலையமாக உள்ள சால்ட்கோட்டர்ஸ் வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், 24 மணி நேர வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், அரங்கங்கள், சுழலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் என பல்வேறு வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பூர்வாங்க மதிப்பீடுகள், செயல்திட்டங்களை வகுக்க அங்கீகாரம் பெற்ற முகமையாக சிஎம்டிஏ தேர்வு செய்யப்படவுள்ளது.

   இதுதொடர்பாக தெற்கு ரயில்வே, சிஎம்டிஏ, மாநகராட்சி ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

  இதையடுத்து முதற்கட்டமாக இதுதொடர்பான ஒருங்கிணைந்த திட்டங்களை தயாரிக்க தனியார் ஆலோசனை (கன்சல்டன்சி) நிறுவனத்தை விரைவில் தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.