முகப்பு
சென்னை

நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல்

சென்னை, அக். 9: தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை இந்த ஆண்டு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.   இதனால், லட்சக்கணக்கான மீனவர்கள் தவிப்பில் ஆழ்ந்

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:54 PM
பகிர்:

சென்னை, அக். 9: தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை இந்த ஆண்டு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

  இதனால், லட்சக்கணக்கான மீனவர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

  தமிழகத்தில் ஆண் மீனவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு 550 கூட்டுறவு சங்கங்களும், பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு 384 சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 4 லட்சத்து 63 ஆயிரத்து 776 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

  இருமுறை நிவாரணம்...  கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நிவாரணம் அளிக்கப்படுகிறது. ஒன்று, கடலில் மீன்பிடிக்கச் செல்லாத 45 நாள் தடைக் காலத்தில் தலா ரூ. 500 வழங்கப்படுகிறது.

  இதேபோன்று, மத்திய - மாநில அரசுகள், கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் நிவாரணத் தொகையும் ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.

  கடந்த ஆண்டு வரை ரூ. 1,200 ஆக இருந்த இந்தத் தொகை இந்த ஆண்டு முதல் ரூ. 1,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மீனவருக்கும் மத்திய அரசு சார்பில் ரூ. 600-ம், மாநில அரசு சார்பில் ரூ. 600-ம், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ரூ. 600 என மொத்தமாக ரூ. 1,800 அளிக்கப்படுகிறது.

  இதற்காக, சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் முதல் 8 மாதங்களுக்கு தலா ரூ. 75 செலுத்துகின்றனர். இந்த நிவாரணத் தொகை தீபாவளி பண்டிகை சமயத்தில் கொடுக்கப்படுகிறது.

  கூட்டுறவு சங்கத்தில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கு மத்திய அரசின் நிவாரணத் தொகை கிடைக்காது. மாநில அரசு மற்றும் சங்கங்களின் நிவாரணத் தொகையான ரூ. 1,200 மட்டுமே கிடைக்கும்.

  திடீர் அறிவிப்பால் குழப்பம்... இந்த நிவாரணத் தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் மூலமாக மீனவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், "இந்த ஆண்டில் இருந்து வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும் என்றும், அதன் மூலம் நிவாரணத் தொகையை எடுத்துக் கொள்ளலாம்' எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  இந்த அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணத் தொகை உரியவர்களுக்கு சென்றடையும் என்றாலும், வங்கிகள் மூலம் பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்கின்ற மீனவர் நலச் சங்கங்கள்.

  ""வங்கி நடைமுறைகளை கையாளும் அளவுக்கு மீனவர்களுக்கு போதிய கல்வியறிவு இல்லை. மேலும், மீனவ கிராமங்களுக்கு அருகில் எந்த வங்கிகளின் கிளையும் இல்லை. நிவாரணத் தொகைக்காக வங்கிக் கிளைகளுக்குச் சென்றால் அதைப் பெற மீனவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வங்கிக் கிளையை முற்றுகையிடும் நிலை உருவாகும். இதனால், வங்கிக் கிளையின் தினசரி பணிகள் பாதிக்கப்படலாம். அப்படியே, வங்கிக் கணக்கை உருவாக்க வேண்டுமெனில், அது பூஜ்ஜிய இருப்பு கொண்ட வங்கிக் கணக்காக இருக்க வேண்டும்'' என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  அரசின் இந்த திடீர் உத்தரவு ஒரு சில மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது என மீனவ சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.

  ""காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் இது அரசு உத்தரவாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மீனவர்களிடையே கடுமையான குழப்பம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி செலவுகளுக்கு நிவாரணத் தொகையை நம்பியிருக்கும் மீனவர்களுக்கு அரசின் உத்தரவு சிரமத்தை உருவாக்கும். இதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் கு.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.