தீராத பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நொளம்பூர் மக்கள்: அக்கறை காட்டுமா அரசு?
சென்னை, அக். 22: குண்டும் குழியுமான சாலைகள், கழிவுநீர் கால்வாய் பிரச்னை, துர்நாற்றம் வீசும் குடிநீர், கொசுத் தொல்லை ஆகியவற்றுக்கிடையே அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பல ஆண்டுகளாக நொளம்பூர் மக்கள் பரிதவித்த
சென்னை, அக். 22: குண்டும் குழியுமான சாலைகள், கழிவுநீர் கால்வாய் பிரச்னை, துர்நாற்றம் வீசும் குடிநீர், கொசுத் தொல்லை ஆகியவற்றுக்கிடையே அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பல ஆண்டுகளாக நொளம்பூர் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
முகப்பேர் அடுத்துள்ள நொளம்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், வில்லிவாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் இதைக் கண்டு கொள்வதே இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குண்டும் குழியுமான சாலைகள்: நொளம்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் குண்டு குழிகள் இல்லாத சாலைகளே இல்லை என்று சொல்லலாம்.
இந்த ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வரும், பிரியா திருமண மண்டபத்துக்கு எதிரில் அமைந்துள்ள முகப்பேர் பிரதான சாலை பல ஆண்டுகளாக "பல்லாங்குழி' சாலையாக மாறிக்கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் நிலை பரிதாபமாக உள்ளது. உட்புறச் சாலைகளும் இதுபோல் குண்டும் குழியுமாகவே உள்ளன.
Advertisement
சில பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய் திறப்புகள் சாலை மட்டத்துக்கு மேல் அரையடி உயரத்தில் அமைந்துள்ளன. இதனால் இரவில் வாகனத்தில் வருபவர்கள் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகின்றனர் என நொளம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நான்காவது பிளாக்கில் வசிக்கும் ராஜேந்திரன் தெரிவித்தார்.
கலங்கலாக வரும் குடிநீர்: குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் எப்போதும் கலங்கலாகவே வருகிறது. சில சமயங்களில் துர்நாற்றத்துடன் குடிநீர் வருகிறது. எனவே இந்த நீரை பாத்திரங்கள் கழுவுவதற்குகூட பயன்படுத்துவதில்லை என்றார் அப்பகுதியைச் சேர்ந்த கமலா.
தூர்வாராத மழைநீர் வடிகால்வாய்: நான்காவது பிளாக்கில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய், பல ஆண்டுகளாக அப்பகுதியின் கழிவுநீர்க் கால்வாயாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், மழைநீர் வடிகால்வாயை கழிவுநீர்க் கால்வாயாக பயன்படுத்தி வருகிறோம் என்கின்றனர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்.
ஆனால் இந்த கால்வாய் பல மாதங்களாக குப்பை கொட்டும் வளாகமாக மாறி, கழிவுநீர் செல்ல முடியாத வகையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பல முறை புகார் அளித்தும், கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கொசு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.
வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கூவத்தில் கலக்கும் வகையில் மாற்று வழி செய்து தருமாறு இப்பகுதி குடிநீர் வாரிய அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தபோது, அந்த வசதியை நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக, புனித டிரினிட்டி தொடக்கப் பள்ளி சார்பில், குடிநீர் வாரிய முகப்பேர் மேற்கு இளநிலை பொறியாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து ஒராண்டு ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுத்திகரிப்பு நிலையம் கட்ட அனுமதி: இதுகுறித்து அப்பகுதி குடிநீர் வாரிய அதிகாரி கூறுகையில், "நான்காவது பிளாக்கில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்வாயை, ஊராட்சி ஒன்றியம்தான் தூர்வார வேண்டும். இந்தப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் கழிவுநீர் பிரச்னை உள்ளது. நொளம்பூரில் 13 சதுர அடி அகலமும், 30 சதுர அடி நீளமும் கொண்ட இடத்தில் ஒரு வீடு கட்டதான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அனுமதி அளித்தது.
ஆனால் இப்பகுதி மக்கள் இரண்டடுக்கு, மூன்றடுக்கு மாடி வீடுகளை அமைத்துள்ளனர். இதற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், அம்பத்தூர் நகராட்சி அதிகாரிகளும் மறைமுகமாக உதவியுள்ளனர். இதுவே கழிவுநீர் பிரச்னைக்கு முக்கிய காரணம்.
தற்போது முகப்பேர் மேற்கு பகுதிக்கு இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இதில் ஒன்று நொளம்பூர் பகுதியில் அமைக்கப்படும். அதன்பிறகு கழிவுநீர் பிரச்னை தீர்வுக்கு வந்துவிடும்.
அதுவரை இதற்கு எந்தவித மாற்று ஏற்பாடும் செய்ய முடியாது' என்றார் அவர்.நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோல் தட்டிக்கழித்து வரும் நிலையில், தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.