உத்தரவாதம் இல்லாத வாகன நிறுத்தும் இடங்கள்!
சென்னை: சென்னையில் ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் கொடுத்து நிறுத்தப்படும் வாகனங்களின் பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. கெடுபிடி கட்டண வசூல், வாகனங்கள் மற்ற
சென்னை: சென்னையில் ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் கொடுத்து நிறுத்தப்படும் வாகனங்களின் பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது.
கெடுபிடி கட்டண வசூல், வாகனங்கள் மற்றும் பெட்ரோல் திருட்டு என்று பயணிகள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தபோதும், வேறு வழியின்றி இந்த வாகன நிறுத்தும் இடங்களையே நம்பியுள்ளனர்.
சென்ட்ரலில் சைக்கிளுக்கு தினமும் ரூ.3 (மாதாந்திர கட்டணம் ரூ.75), ஸ்கூட்டர், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.6 (மாதாந்திர கட்டணம் ரூ.150) வசூலிக்கப்படுகிறது.
இதர இடங்களில் தினசரி கட்டணம் ரூ.1 குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், சில சமயங்களில் மணி நேரத்தை கூடுதலாகக் கூறி கூடுதல் கட்டண வசூல் செய்யப்படுகிறது.
சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 78 ஆகும். இதில் இதுவரை 58 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்களை 3 ஆண்டுகளுக்கு நடத்த ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள சைக்கிள், இதர 2 சக்கர வாகன நிறுத்தும் இடங்களுக்கு முன்பணமாக செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வரம்புத் தொகை விவரம் (லட்சம் ரூபாயில்):
கோடம்பாக்கம் 24.84, குரோம்பேட்டை 50.43, தாம்பரம் சானடோரியம் 50.43, திருவள்ளூர் 7.91, பெரம்பூர் 45.36, திருமுல்லைவாயில் 7.20, சென்னை கடற்கரை 7.11, பரங்கிமலை 45.85, ஆவடி 14.08.
தாம்பரம் வாகன நிறுத்துமிடத்துக்கு குறைந்தபட்ச தொகை ரூ.1.87 கோடி ஆகும்.
இது போல பெருந்தொகைக்கு ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், வில்லிவாக்கம், பெரம்பூர், கொரட்டூர் உள்ளிட்ட வாகன நிறுத்தும் இடங்கள் இதுவரை ஒப்பந்த அனுமதி வழங்கப்படாமல் உள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்: வில்லிவாக்கத்தில் உள்ள 2 வாகன நிறுத்துமிடங்களுக்கும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், கட்டணம் வசூலிக்க யாரும் இல்லாத நிலையில் பயணிகள் தங்கள் வாகனங்களை கவனிப்பாரின்றி நிறுத்திச் செல்கின்றனர்.
இங்கு ஏராளமான வாகனங்கள் மழை நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் ஒன்றின் மீது சாய்ந்த நிலையில் பராமரிப்பின்றி கிடக்கின்றன.இந்த வாகனங்களில் இருந்து பெட்ரோல், உதிரி பாகங்கள், ஹெல்மெட் உள்ளிட்டவை கும்பல்களால் திருடப்படுகின்றன.
இதனால், மீண்டும் திரும்பி வரும் பயணிகளுக்கு தங்களது வாகனம் கிடைத்தாலே போதும் என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலை உள்ளது.
வெயிலில் காயும் வாகனங்கள்: சென்ட்ரலில் வாகன நிறுத்துமிடத்தில் கழிவு நீர் பெருக்கெடுத்து தேங்கியுள்ளது. இதனால், வாகனத்தை தேடி எடுத்து, வெளியே கொண்டு வருவதற்குள் பயணிகள் மிகவும் திண்டாடும் அவல நிலை உள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தின் 2-வது பிரதான வாயில் பகுதியில் தினமும் நிறுத்தப்படும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு வானமே கூரையாக உள்ளது. வெயில் காலத்தில் இந்த வாகனங்களின் டியூப்புகள் வெடிப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
பெட்ரோல் திருட்டு: வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களில் பெட்ரோல் திருட்டு வாடிக்கையாக மாறியுள்ளது. இதைத் தட்டிக் கேட்டால் அடுத்து வரும் நாள்களில் அவர்களின் வாகனங்கள் பஞ்சர் செய்யப்படுகின்றன.
இதனால், பரிதாபமாக விழிக்கும் பயணிகளுக்கு, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய கதையாக, வாகன நிறுத்துமிடங்களில் பழுது நீக்கும் சேவைக்கான செல்போன் எண்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல உதிரிபாகங்கள், ஹெல்மெட்டுகள் மட்டுமின்றி வாகனங்களும் திருடு போகின்றன.
எனவே, பயணிகளின் நம்பகத்தன்மையைப் பெறும் வகையில், லாப நோக்கின்றி இந்த வாகன நிறுத்துமிடங்களை முறையாக நடத்துவதற்கு வேலை தேடும் இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். தெற்கு ரயில்வே
முன்வருமா?