சென்னை சங்கமம், கலைகளின் சங்கமம்!!
சென்னை, ஜன.13: சென்னை சங்கமம் நம் மண்ணின் மரபு சார்ந்த பல கலைகளின் சங்கமமாக நடந்து வருகின்றது. சென்னை சங்கமம் நடக்கும் சில இடங்களில் புதன்கிழமை உலா வந்தோம். ÷கோடம்பாக்கம் மாநகராட்சி திடலில் பனையூர் ரா
சென்னை, ஜன.13: சென்னை சங்கமம் நம் மண்ணின் மரபு சார்ந்த பல கலைகளின் சங்கமமாக நடந்து வருகின்றது. சென்னை சங்கமம் நடக்கும் சில இடங்களில் புதன்கிழமை உலா வந்தோம்.
÷கோடம்பாக்கம் மாநகராட்சி திடலில் பனையூர் ராஜா குழுவினரின் பறையாட்டம், ஆறுமுகநேரி காளிதாஸ் குழுவின் நையாண்டி மேளம், கரகம், கொக்கலிக் கட்டை ஆட்டம் போன்றவை உள்ளூர் மக்களையும் வெளிநாட்டுப் பயணிகளையும் கூட தன்னை மறந்து ரசிக்க வைத்தது. ஹமீது குழுவினரின் சிலம்ப ஆட்டம் மக்களிடையே பெரும் ஆரவாரத்தைப் பெற்றுத் தந்தது.
÷சிலம்பாட்டத்தில் என்னென்ன வகைகளைச் செய்து காட்டினீர்கள்? என்று ஹமீதிடம் கேட்டோம்.
÷""சலாம் வரிசை, உடான், வீடு, படை வீச்சு, கட்டுப்பாடம் ஆகிய பயிற்சிகளைச் செய்து காட்டுவோம். தற்காப்பு ஆட்டத்தில், ஒரு பெண்ணை ஐந்து பேர் சுற்றி வளைத்துத் தாக்கினால் எப்படி அவர்களைச் சமாளிப்பது என்று செய்துகாட்டினோம். அலங்காரப் பாடம் என்று ஒன்றிருக்கிறது. இதில் தீப்பந்தம் சுற்றுவது, தராசின் இரண்டு தட்டுகளில் தண்ணீர் இருக்கும் இரண்டு டம்ளர்களை வைத்துக் கொண்டு, அவற்றில் இருக்கும் தண்ணீர் சிந்தாமல் தராசை சுற்றுவது போன்றவை இடம்பெறும்'' என்றார்.
÷தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரியக் கலைகளோடு கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற இதர மாநிலங்களைச் சேர்ந்த கலைகளும் சென்னை சங்கமத்தில் கலந்திருப்பதை அறியமுடிந்தது.
÷கர்நாடக மாநிலம்,ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களின் டொல்லுகுனிதா என்னும் பாரம்பரியக் கலை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தந்தது. இந்தக் கலையைப் பற்றி குழுவின் தலைவர் ஹெச்.கே.பூடியப்பா நம்மிடம் பேசியதிலிருந்து,
÷""15 முதல் 20 கலைஞர்களைக் கொண்டு இந்த டொல்லுகுனிதா நிகழ்ச்சியை நடத்துவோம். இந்தக் கலைக்கு புராணத்தில் ஒரு கதையே உண்டு. டொல்லீஸ்வரன் என்னும் அரக்கன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த சிவன், "என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டான். டொல்லீஸ்வரனோ, சிவனே தனக்கு உணவாக வேண்டும் என்றான். அவ்வாறே சிவன் டொல்லீஸ்வரனுக்கு உணவானார். அண்டசராசரமே ஸ்தம்பித்தது. அந்த அரக்கனை சம்ஹாரம் செய்யுமாறு தேவர்கள் அனைவரும் விநாயகரை வேண்டினர். விநாயகர் டொல்லீஸ்வரனை சம்ஹாரம் செய்து சிவனை வெளிக்கொணர்ந்தார். டொல்லீஸ்வரனின் தோலை உரித்து அவனுடைய நரம்புகளைக் கொண்டு கட்டி வாத்தியமாக்கினார் விநாயகர். அந்த வாத்தியத்தை அவனுடைய கை எலும்பைக் கொண்டே இசைத்தபடி நடனம் ஆடவும் செய்தார். இதுதான் டொல்லுகுனிதா ஆட்டத்தின் கதை. இந்த பாரம்பரியக் கலையை இந்தியா முழுவதும் வெளிநாடுகளிலும் கூட சென்று நடத்தியிருக்கிறோம். சென்னை சங்கமத்திற்காக நடத்துவது இதுதான் முதல் முறை'' என்றார்.
÷வள்ளுவர் கோட்டம், சுதந்திரதின பூங்காவில், வல்லநாடு பரமசிவத்தின் நையாண்டி மேளத்திற்கும், கரகம், பொம்மை நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற நிகழ் கலைகளுக்கும் அந்தப் பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக நையாண்டி மேளத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துள்ளி ஆட ஆரம்பித்துவிட்டனர்.
÷அசோக் நகர் பூங்காவில் தோட்டக்குடி மாரியப்பன் குழுவின் நையாண்டி மேளம், புலியாட்டம், சேவையாட்டம் போன்றவை ரசிகர்களை குதூகலப்படுத்தின. கே.கே.நகர், சிவன் பூங்காவில் கரடி ஆட்டம் குழந்தைகளைக் கொஞ்ச நேரம் காட்டிற்குள்ளேயே அழைத்துச் சென்றது போல் இருந்தது.
÷மண் சார்ந்த கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மேடைகளில் "கல்லூரி கானா போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது தேவையா?' என்பதை அமைப்பாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
÷பெரும்பாலும் திறந்த வெளி அரங்கங்களில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வருகின்றனர். அவர்களுக்கு நம்முடைய மண் சார்ந்த கலைகளின் பெருமையை விளக்கும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட சிறிய விவரக் குறிப்புகளை தந்தால், அவர்கள் நம்முடைய கலையை மேலும் புரிந்து ரசிப்பதற்கு உதவியாக இருக்கும். கடந்த ஆண்டு நடந்த "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளின் தொகுப்பை டி.வி.டி.க்களாக விற்பனை செய்கின்றனர். அவை குறித்த தகவல்களை ஆங்கிலத்தில் அறிவித்தால், மற்ற மாநிலத்திலிருந்து வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிப் பயனடைவதற்கு உதவும்.