என்.எஸ்.எஸ். திட்டத்தை அறிந்திராத மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
சென்னை, மே 6: சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலனோர் நாட்டுநலப் பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) குறித்து அறிந்திராத நிலையில் உள்ளனர். பெரும்பாலானப் பள்ளிகளில் இத்திட்டமே இல்லாததுதான் இதற்குக்
சென்னை, மே 6: சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலனோர் நாட்டுநலப் பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) குறித்து அறிந்திராத நிலையில் உள்ளனர்.
பெரும்பாலானப் பள்ளிகளில் இத்திட்டமே இல்லாததுதான் இதற்குக் காரணம்.
பள்ளிப் பருவத்திலேயே சமூகத்தின் மீது அக்கறையும், சமூக சேவையில் ஈடுபாடும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.). இந்தத் திட்டம் பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
Advertisement
குடிசைப் பகுதி அல்லது கிராமப் பகுதியைத் தத்தெடுத்துக் கொண்டு, அப்பகுதியை சுத்தம் செய்வது, மரக் கன்று நடுவது, அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட சேவைகளில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் அல்லாமல் தனியார் பள்ளிகளிலும் சமூக அக்கறையோடு இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் 30 மேல்நிலைப் பள்ளிகளில் 10 பள்ளிகளில் மட்டுமே என்.எஸ்.எஸ். திட்டம் உள்ளது. மீதமுள்ள 20 பள்ளிகளில் இத்திட்டம் இல்லை.
கொசு ஒழிப்பு விழிப்புணர்வு, குப்பைகளை தரம் பிரித்தல், குடிநீரை சுகாதாரத்துடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட பொதுமக்களுக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனால், முழுமையாக இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறிதான். இதுபோன்ற விழிப்புணர்வு திட்டங்களை, பள்ளி மாணவ, மாணவிகள் நடைமுறைப்படுத்தும்போது, முழுமையான அளவில் பொதுமக்களிடையே சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதற்கு பள்ளிகளில் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் அவசியம்.
எனவே, சென்னை மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் என்.எஸ்.எஸ். கொண்டுவர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:
பள்ளிகளில் என்.எஸ்.எஸ். திட்டம் மிகவும் அவசியம். அதிகாரிகளுடன் கலந்து பேசி, எந்தெந்தப் பள்ளிகளில் என்.எஸ்.எஸ். இல்லையோ, அந்தப் பள்ளிகளில் இத்திட்டத்தைக் கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.