தாற்காலிக பணியாளர்களை நியமிக்க முடிவு: தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு தினமும் படையெடுக்கும் இளைஞர்கள்
சென்னை,அக். 22: ரயில்வே துறையில் உள்ள காலியிடங்களில் தாற்காலிக பணியாளர்களை, மண்டல பொது மேலாளர்கள் மூலம் நியமிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, முறையான அறிவிப்பு வெளியாகும் முன்னரே,
சென்னை,அக். 22: ரயில்வே துறையில் உள்ள காலியிடங்களில் தாற்காலிக பணியாளர்களை, மண்டல பொது மேலாளர்கள் மூலம் நியமிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, முறையான அறிவிப்பு வெளியாகும் முன்னரே, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான இளைஞர்கள் வந்து, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
கடந்த 31.3.2008 நிலவரப்படி, ரயில்வே துறையில் முதல் நிலை அலுவலர்கள் முதல் கடை நிலை பணியாளர்கள் வரை 1 லட்சத்து 72,444 காலியிடங்கள் உள்ளன.
இதன்பிறகு ஆண்டுதோறும் 3 சதவீத பணியாளர்கள் ஓய்வு பெற்றதால், காலியிடங்களின் எண்ணிக்கை இப்போது 2.55 லட்சமாக அதிகரித்துள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் சி மற்றும் டி பிரிவுகளில், இப்போதுள்ள காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 11,789 ஆகும். டிராக் மேன் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவு பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
பொறியியல், இயக்கம் (ஆபரேட்டிங்), சிக்னல் உள்ளிட்ட பிரிவுகளிலும் காலியிடங்கள் நிரப்பப்படாததால், ரயில் சேவைகளை நடத்துவதில் தினமும் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதனால் இப்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில் பாதைகளில் விரிசல் மற்றும் சதி முயற்சி சம்பவங்களைத் தடுப்பதில் பல்வேறு சவால்களை தெற்கு ரயில்வே எதிர்நோக்கியுள்ளது.
ரயில்வே துறையில் பாதுகாப்பு மற்றும் பொறியியல் பிரிவுகளில் உள்ள டி பிரிவு காலியிடங்களில் பதிலி முறையில் தாற்காலிக பணியாளர்களை நியமிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்தது.
உடனடி தேவைக்கு ஏற்ப, காலியிடங்களில் 2 முதல் 10 சதவீதம் வரை நிரப்ப அந்தந்த மண்டல பொது மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விதிமுறைகளும் கடந்த 17.9.2010-ல் வெளியிடப்பட்டது.4 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றும் பதிலி ஊழியர்கள், தாற்காலிக பணியாளர்களாகக் கருதப்பட்டு, பிற்காலத்தில் காலிப் பணியிடங்களுக்கான பணி நியமனத்தின்போது முன்னுரிமை அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மெüனம்
ரயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பை ஒரு சில தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ள போதும், பெரும்பாலான தொழிற்சங்கங்கள் மெüனம் காத்து வருகின்றன. எனினும், இதுதொடர்பாக ரயில்வே துறை சார்பில் முறையான ஆணை எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் தாற்காலிக முறையில் பதிலி ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான இளைஞர்கள் சென்னை சென்ட்ரலை அடுத்துள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு ஆர்வத்துடன் வருகின்றனர். இப்போது பணி நியமனம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் அளிக்கும் பதிலைக் கேட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
கட்டுக் கட்டாக குவியும்
விண்ணப்பங்கள்
தமிழகம், கேரளத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கானோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்புகின்றனர். இதனால், இந்த அலுவலகத்தின் பொதுப் பிரிவில் கட்டுக் கட்டாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இந்த விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும், பராமரிக்கவும் இயலாமல் அலுவலர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பைத் தேடி வரும் பல ஆயிரக் கணக்கான இளைஞர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் தெற்கு ரயில்வே இதுவரை அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் விண்ணப்பங்களைத் தயாரித்து 20-க்கு விற்பனை செய்வதிலும் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பணியாளர்களை நியமிப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பதிலி முறையில் தாற்காலிக பணியாளர்களை நியமிக்க அனுமதிப்பது ரயில்வே துறையின் நம்பகத் தன்மையைப் பாதுகாக்குமா?