மார்கழி வழிபாடு: ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசும்
சென்னைமார்கழி வழிபாடு: ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசும்
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கர மேந்துந் தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்!
விளக்கம்: எல்லோருக்கும் முன்னதாகவே தான் எழுந்திருந்து எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, எல்லோரும் வந்து எழுப்பும்படி படுத்திருக்கும் ஓர் ஆயர்மகளை நங்காய்! நாணாதாய்! என்றெல்லாம் சொல்லி எழுப்புகிறார்கள் தோழியர்கள். கதிரவன் தோன்றியதும் செங்கழுநீர் மலர் மலர்ந்து, ஆம்பல் வாய் மூடிக் கொள்வதை ஓரிடத்தில் பார்த்த பெண்கள், அதையே அனுமான ப்ரமாணமாகக்கொண்டு, உங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள வாவியில், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின என்றும், செங்கற் பொடியின் நிறத்தைப் போன்று செந்நிறமுடைய ஆடையை அணிந்த துறவியர் சத்துவகுணம் நிறைந்த விடியற்காலையை உணர்த்துவதற்காகச் சங்கு ஒலிக்கத் தாங்கள் தங்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். சிலர் சென்றுகொண்டு இருக்கிறார்கள் என்று கூறி, வாய்ச்சொல்லில் வல்லவளே எங்களை எழுப்புவதாகச் சொன்னாயே தவிர செயலில் காட்டவில்லையே! இதற்கு நீ வெட்கப்படுவதாகவும் தெரியவில்லை! ஆனால், நீ பேச்சில் வல்லவள், அனுமன் முதன் முதலில் ராமனைச் சந்தித்தபோது அவனோடு சிறிது உரையாடினான். அவனுடைய பேச்சில் ராமன் தன் மனதைப் பறிகொடுத்தான்.
நீயும் உன் சொற்களால் கண்ணனின் மனதைக் கவரக்கூடியவள். பெண்களில் சிறந்தவளே! கண்ணன் அன்புமிக்க அடியார்களுக்கு நான்கு கைகளைக் கொண்டவனாகவே காட்சியளிப்பான்; பகைவர்களுக்குக் காட்சியளிக்கும்போது இரண்டு கைகளை உடையவனாகவே தோன்றுவான். கண்ணன் கமலக்கண்ணன்! அவனுடைய கண்ணழகையும், மிகவும் ஒளிபொருந்திய திருச்சக்கரத்தையும், செங்கமல நாண்மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போன்ற வெள்ளை விளிசங்கினையும் ஏந்தி இருக்கும் அழகோடு சேர்த்துப் பாடுவதற்கு எழுந்து வாராய்! என்று எழுப்புகிறார்கள்.
ஒவ்வொருவரும் விடியற்காலையிலே உறங்கி எழுந்தவுடன் இறைவனைப் பக்தியோடு நினைப்பதும், அவன் பெருமைகளைப் பாடுவதும் சிறந்த செயலாகும். அது வாழ்க்கையை ஒளிர்விக்கும். இப்பாசுரம் "திருவழுந்தூர்' என்ற திவ்ய தேசத்தைக் குறிக்கிறது. இப்பாசுரத்தின் வழி எழுப்பப்படுபவர் "திருப்பாணாழ்வார்' என்பர்.