மார்கழி வழிபாடு: ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 15
எல்லே இளங்கிளியே! இன்ன முறங்குதியோ! சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந
சென்னைமார்கழி வழிபாடு: ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 15
எல்லே இளங்கிளியே! இன்ன முறங்குதியோ! சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந
எல்லே இளங்கிளியே! இன்ன முறங்குதியோ!
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்!
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலே ரெம்பாவாய்!
விளக்கம்: அடியார்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்திருக்கும் கூட்டத்தைக் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறவள் ஓர் ஆயர்மகள். அப்படிப்பட்டவளை இப் பாசுரத்தில் எழுப்புகிறார்கள் தோழியர்கள். ஏனைய பாசுரங்கள் போல் இல்லாமல் இந்தப் பாசுரம் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.
தோழியர்கள் இவளுடைய வீட்டுக்கு வரும்போது, இவள் இனிய குரலில் கண்ணனைப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். வந்தவர்கள் வந்த நோக்கத்தை மறந்து இவளுடைய அழகிலும் இசையிலும் மனதைப் பறிகொடுத்து, "எல்லே இளங்கிளியே!' என்று புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் வேளையில், தோழியர் எழுப்புவது தன் செயலுக்கு இடையூறு என்று நினைத்த அப்பெண் "சில்' என்று அழைக்காதீர்கள்! நங்கைமீர்! இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்று சினத்துடன் பதில் கூறினாள்.
இவள் கூறியதைக் கேட்ட தோழியர், "நீ இவ்வாறு கடுமையாகப் பேசுவாய் என்பது எங்களுக்கு வெகுநாள்களாகவே தெரியும்' என்றார்கள். கடுமையாகப் பேசுவதில் நீங்களே வல்லவர்கள் என்று மிகக் கடுமையாகச் சொன்ன ஆயர்மகள், அடியார்களோடு வாதிடக்கூடாது என்று கூறப்படுவதால் கடுமையைக் குறைத்துக்கொண்டு, "நானே பேச்சில் வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன்' என்று கூறி அடங்கிவிட்டாள். அப்படியாகில் "எங்களோடு சேர்வதைவிட நீ என்ன பெரிய வாய்ப்பை எதிர்பார்க்கிறாய்! விரைவாக வந்துசேர்' என்றார்கள் தோழியர்கள். எல்லாரும் வந்தனரா? என்றாள் படுத்திருப்பவள்.
வந்துவிட்டனர் நீ வந்து ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்துக்கொள்! வலிமை மிக்க குவலயாபீடம் என்கிற யானையை அழித்தவனும், பகைவர்களின் பகையை நீக்கவல்லவனும் முதலில் கோபியர்களுக்குத் தோற்று, பிறகு அவர்களைத் தோற்கடிப்பவனுமாகிய மாயனைப் பாட எழுந்துவாராய் என்று அழைக்கிறார்கள்.
இந்தப் பாசுரம் திருமங்கையாழ்வாரை எழுப்புவதாகக் கூறுவர். இந்தப் பாசுரம் திருவல்லிக்கேணி என்ற திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.