கடத்தப்பட்டு விபத்தில் சிக்கிய ரயில் ரூ. 23 லட்சத்துக்கு ஏலம்
சென்னை, பிப். 20: சென்னை சென்ட்ரலில் இருந்து கடத்தப்பட்ட வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே விபத்தில் சிக்கி உருக்குலைந்த ரயில் என்ஜின், 2 பெட்டிகளுடன் ரூ. 23 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இந்த சம
சென்னை, பிப். 20: சென்னை சென்ட்ரலில் இருந்து கடத்தப்பட்ட வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே விபத்தில் சிக்கி உருக்குலைந்த ரயில் என்ஜின், 2 பெட்டிகளுடன் ரூ. 23 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து 20 மாதங்களுக்குப் பின்னரும் இந்த வழக்கு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இதுவரை துப்பு துலங்கவில்லை. கடந்த 29.4.2009-ல் சென்னை சென்ட்ரல்- மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்படுவதற்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் மின் ரயில் (எம்.டி.3) அதிகாலை 5.15மணிக்கு மர்ம நபரால் கடத்தப்பட்டது.
இந்த ரயிலை பயணிகளுடன், மர்மநபர் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றார். பேசின் பிரிட்ஜ் பகுதியைக் கடந்து இந்த ரயில் அசுரவேகத்தில் சென்று வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரயிலை ஓட்டிச் சென்ற மர்மநபர் உள்பட 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த ரயிலை கடத்திச் சென்று உயிரிழந்தவரின் சடலம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸôர் அறிவித்தனர். இந்த அறிவிப்பு தெற்கு ரயில்வேயின் இணையதளத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஐதராபாத், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் நடத்திய விசாரணையில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இதில் சதி நடந்துள்ளதா என்பது குறித்தும் துப்பு ஏதும் துலங்கவில்லை.
இந்த கோர விபத்தில் மின் ரயிலின் என்ஜின், 3 பெட்டிகள், சரக்கு ரயிலின் என்ஜின் ஆகியவை பலத்த சேதமுற்றன. இதனால், தெற்கு ரயில்வேக்கு பல்வேறு வகைகளில் ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதில் மிகவும் சேதமுற்ற மின் ரயில் என்ஜினும்,2 பெட்டிகளும் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே ரயில்பாதையின் ஓரத்தில் வெயிலிலும், மழையிலும் "நிûனைவுச் சின்னமாக' நிறுத்தப்பட்டிருந்தன. விபத்து நடந்த இடத்தின் வழியாக மின் ரயில்களில் செல்லும் பயணிகள், உருக்குலைந்த ரயில் பெட்டிகளை ஒருவித அச்சத்துடன் பார்த்துச் செலலும் நிலை இருந்தது.
இந்த நிலையில், விபத்தில் உருக்குலைந்த ரயில் என்ஜின், பெட்டிகளை தெற்கு ரயில்வே ரூ. 23 லட்சத்துக்கு ஏலம் விட்டது. இதையடுத்து, இந்த ரயில் பெட்டிகள், என்ஜின் ஆகியவை வெல்டிங் சாதனங்களின் உதவியுடன் வெட்டி எடுத்து, பழைய இரும்பு வியாபாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டது.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ரயில் கடத்தல்-விபத்து தொடர்பான வழக்கு கடந்த 20 மாதங்களாகியும் துப்புத் துலக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.