சென்னை

மரணக் கயிறாக மாறும் மாஞ்சா கயிறு

சென்னை, ஏப். 1: சென்னையில் மாஞ்சா கயிற்றால் விடப்படும் பட்டங்களால் அண்மைக் காலமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன.  மதுரவாயிலில் ஞாயிற்றுக்கிழமை மாஞ்சா கயிறு அறுத்து இளைஞர் இறந்திருக்கும் சம்பவம் பொது

கே.வாசுதேவன்

சென்னை, ஏப். 1: சென்னையில் மாஞ்சா கயிற்றால் விடப்படும் பட்டங்களால் அண்மைக் காலமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

 மதுரவாயிலில் ஞாயிற்றுக்கிழமை மாஞ்சா கயிறு அறுத்து இளைஞர் இறந்திருக்கும் சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் மாஞ்சா கயிற்றில் சிக்கி 2 வயது குழந்தை இறந்தது. இச் சம்பவத்துக்கு பின்னர் மாஞ்சா கயிற்றில் பட்டம் விடுவதற்கு காவல்துறை தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் உத்தரவு பெயரளவிலேயே உள்ளது. இப்போதும் மாஞ்சா கயிற்றால் பட்டம் விடுவதும், அதனால் உயிர் இழப்புகள் ஏற்படுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

 மாஞ்சா கயிற்றால் ஆண்டுக்கு சென்னையில் சுமார் 50 விபத்துகள் வரை ஏற்படுவதாகவும், 2 பேர் வரை இறப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் புள்ளி விவரம் கூறுகிறார். இந்தாண்டு 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஒவ்வொரு முறையும் மாஞ்சா கயிற்றால் உயிர் இழப்புகள் ஏற்படும்போது, அது தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிக் கொள்ளும் காவல்துறை, அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அவர் குற்றம்சாட்டுகிறார்.

 இதனால் ஒரு காலத்தில் வியாசர்பாடி,பெரம்பூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பட்டம் விடப்பட்டது. ஆனால் நகரில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் இப்போது பட்டம் விடப்படுகிறது.

 மாஞ்சா கயிற்றில் மயில்துத்தம், கண்ணாடித் துகள்கள், வஜ்ரம், வண்ணப் பொடி உள்ளிட்ட பல வேதிப் பொருள்கள் பூசப்படுவதால், விபத்தில் சிக்கும்போது உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

 மாஞ்சா கயிற்றால் பட்டம் விடப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மனித உயிருக்கே மாஞ்சா கயிறு பட்டங்கள் ஆபத்து விளைவித்ததால், மாஞ்சா கயிற்றில் பட்டம் பறக்கவிடுவதற்கு காவல்துறையும் தடை விதித்தது. இந்தத் தடையை விதித்தபோது காவல்துறையும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னர் காவல்துறையினர் இதனைக் கண்காணிக்கவில்லை. இதனால் மாஞ்சா கயிறு பட்டங்கள் சுதந்திரமாக பறக்கத் தொடங்கின.

 அண்மைக்காலமாக மாஞ்சா கயிறு பட்டங்கள் விடுவது, இப்போது போட்டி வைத்து விளையாடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதனால் மாஞ்சா கயிற்றால் காயமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாஞ்சா கயிற்றால் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அதிகமாகக் காயமடைகின்றனர்.

 இச் சம்பவங்கள் குறித்து காவல்துறை கவனத்துக்குக் கொண்டு வந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இக்காரணத்தால் மாஞ்சா கயிறு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டன் பகுதியில்

 மாஞ்சா கயிறு, பட்டத்தின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

 காவல்துறை கடமை தவறியதால் சில பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வட சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இனியும் இப் பிரச்னையை காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டால், அது எதிர்காலத்தில் பெரும் சவாலான பிரச்னையாக உருவெடுக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

 மாஞ்சா கயிற்றால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலைக்குப் பதிலாக வானத்தை பார்த்தபடி செல்ல வேண்டிய நிலையுள்ளது. இப் பிரச்னையில் பட்டம் விற்பவர்கள், மாஞ்சா கயிறுக்குரிய வேதிப் பொருள்கள் விற்பவர்கள் ஆகியோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 மேலும் உயிர் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்னராவது காவல்துறை தங்களது கடமையை செய்ய ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 மாஞ்சா கயிற்றால் ஏற்பட்ட முக்கிய மரணங்கள்

 * வட சென்னையில் 1982-ல் மாஞ்சா கயிறு பட்டம் விடுவதில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 * கோடம்பாக்கம் அஜீஸ்நகரைச் சேர்ந்த கோதண்டராமன் 2006-ல் அண்ணா மேம்பாலத்தில் மாஞ்சா கயிறு அறுத்து இறந்தார்.

 * 2007-ம் ஆண்டு உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வயது குழந்தை சாவு.

 * எழும்பூரில் 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தில் 4 வயது குழந்தை செரினா பானு சாவு.

 * மதுரவாயிலில் 2012-ல் ஏற்பட்ட விபத்தில் ராஜ்குமார் சாவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT