மெட்ரோ ரயில்: வண்ணாரப்பேட்டை - மண்ணடி சுரங்கப் பணி நிறைவு
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி வரையிலான சுரங்கம் அமைக்கும் பணிகள்
: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி வரையிலான சுரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்திருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது மண்ணடியில் இருந்து எழும்பூர் வரையிலான சுரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீட்டர் தொலைவும் சென்ட்ரலில் இருந்து அண்ணாநகர் 2-வது அவென்யூ வரை 9.7. கி.மீட்டர் தொலைவும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
Advertisement
வண்ணாரப்பேட்டையில் இருந்து எழும்பூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் சுரங்கம் வாயிலாக இயக்கப்படவுள்ளது.
இதற்காக சுரங்கம் அமைக்கும் பணிகள் கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. வண்ணாரப்பேட்டையில் இருந்து எழும்பூர் வரை 2 சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை மேற்கொள்ள 2 டனல் போரிங் இயந்திரங்கள் (துளையிடும் ராட்சத கருவி) இரு சுரங்கப் பாதைகளை அமைத்து வருகின்றன.
இதில் முதலாவது சுரங்ப் பாதையில் 24 சதவீதப் பணிகள் முடிவடைந்து, சுமார் 1341 மீட்டர் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. மற்றொரு பாதையில் 203 மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து கீழ்பாக்கம் நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் வரையிலான முதல் சுரங்கப் பாதையில் 38.3 சதவீதமும், 2-வது பாதையில் 39.2 சதவீதமும் பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும் சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் இருந்து ஜெமினி வரையில் 3.2 சதவீதமும், ஷெனாய் நகரிலிருந்து - திருமங்கலம் வரையிலும் 3.6 சதவீதப் பணிகளும் முடிந்துள்ளன. சைதாப்பேட்டை பகுதியிலும் சுரங்கப் பாதை பணிகள் தொடங்கப்பட்டு முதல் கட்ட நிலையில் உள்ளது.
வேகம் குறைப்பு: சென்னை நகரின் 3 முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை மற்றும் 100 அடி சாலைகளின் அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில் சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா நகர் மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் தொகை அதிகமிருக்கும் பகுதிகளாகும்.
மே தின பூங்காவில் இருந்து சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கியுள்ளது. சுரங்கம் தோண்டும் டனல் போரிங் இயந்திரம் சென்ட்ரல் வழியாக வீடுகள் நிறைந்த சிந்தாதிரிப்பேட்டையை விரைவில் கடக்க உள்ளது.
எனவே துளையிடும் இயந்திரத்தின் அதிர்வை குறைத்து மிக மெதுவாக சுரங்கம் தோண்டும்படி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுரங்கம் தோண்டுவதற்கு முன்பாக சுரங்கம் தோண்டும் பகுதியின் கடின தன்மை பரிசோதிக்கப்பட்ட பின்பே சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.