சென்னை

போற்றுதலுக்குரிய பொக்கிஷக் காவலர்கள்

அடுத்த தலைமுறைக்கு பரிசாக ஏதேனும் கொடுக்க விரும்பினால் நூல்களைக் கொடுங்கள் என்று

க. தங்கராஜா

அடுத்த தலைமுறைக்கு பரிசாக ஏதேனும் கொடுக்க விரும்பினால் நூல்களைக் கொடுங்கள் என்று சீனத்து பழமொழி ஒன்று கூறுகிறது. அதைப் பின்பற்றும்விதமாக அரிய வகை தமிழ் நூல்களைத் தேடிப்பிடித்து, லட்சக்கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து, எதிர்கால இளைஞர்களுக்காக உண்மையான செல்வங்களை பாதுகாத்து வைத்துள்ளனர் நூல்களின் காவலர்கள் இருவர்.

வாசகர்களும் நூல்களும் ஒருவரையொருவர் காதலுடன் சந்தித்துக் கொள்ளும் 36-ஆவது சென்னை புத்தகக் காட்சியில், தனது சொந்த நூலகத்துக்காக சார்லஸ் டார்வினையும், க.ப.அறவாணனையும் தேடிக் கொண்டிருந்தார் பல்லடம் மாணிக்கம். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ் நூல் காப்பகம் என்ற பெயரில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட எழில்மிகு தோட்டத்தில், சுமார் 8 ஆயிரம் சதுர அடி கட்டடத்தில் எழுந்து நிற்கும் அறிவாலயத்தை நடத்தி வருபவர் இவர்.

நூல்கள் மீது கொண்ட காதலால் தனது 16-ஆவது வயதில் இருந்து சுமார் 50 ஆண்டு காலத்தை நூல்களைச் சேகரிக்கவும், அதை பாதுகாக்கவுமே செலவிட்டு வந்துள்ளார் மாணிக்கம். இன்று இவரது நூலகம், ஆசியாவில் உள்ள மிகப் பெரிய தனியார் நூலகங்களில் ஒன்றாக உள்ளது. 1786-ல் அச்சிடப்பட்ட பெப்ரீஷியஸ் அகராதி, தொல்காப்பியம், திருக்குறள், ராமாயணம், வேதங்கள் என சங்க இலக்கியம் முதல் தற்கால தமிழ், உலக இலக்கியங்கள் வரையிலான சுமார் ஒரு லட்சம் நூல்கள்,  இசைப் பேழைகள், குறுந்தகடுகள் இவரிடம் உள்ளன.

ஆண்டுதோறும் சேமிக்கும் பணத்தைக் கொண்டு சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 ஆயிரத்துக்கு நூல்கள் வாங்குவது இவரது வழக்கம். பல லட்சம் நூல்களை ஓரிடத்தில் கண்ட மகிழ்ச்சி இவரது கண்களில் தெரிந்தாலும் தனது நூலகத்தின் எதிர்காலம் குறித்த கவலையில் அவர் தோய்ந்திருந்தார்.

அவரது கவலைதான் என்ன இதோ அவரே கூறக் கேளுங்கள்:

நாடு முழுவதும் தேடிச் சென்று அரிய தமிழ் நூல்களைச் சேகரித்து வருவது சிறு வயது முதலே ஏற்பட்ட பழக்கம். அவ்வாறு சேர்த்த நூல்கள் சுமார் ஒரு லட்சம் வரை இப்போது என்னிடம் உள்ளது. இவற்றை பாதுகாக்க பல லட்சங்கள் செலவழித்துள்ளேன். ஆனால் எனது நூலகத்துக்கான பயன்பாடு இப்போது குறைந்து வருகிறது. எங்கும் இல்லாத நூல்களை சொந்த செலவில் பாதுகாத்து வைத்திருந்து இலவசமாக படிக்க வாய்ப்பு வழங்குகிறேன். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளவோ ஆள்களில்லை.

நூல்கள் வாங்க சராசரியாக மாதம் ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையும், அவற்றை பராமரிக்க ரூ.20 ஆயிரம் வரையும் செலவு செய்கிறேன். ஆனால் இக்கால வாசகர்கள் நீர்த்துப்போய் உள்ளனர். எதைப் படித்தால் அறிவு வளரும் என்று பார்க்கும் காலம் போய், இப்போது எதைப் படித்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

இத்தனை ஆயிரம் நூல்களைச் சேகரித்தும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்காததை இப்போது உணருகிறேன். இந்த மனச்சோர்வும் வயதாகிவிட்டதால் ஏற்பட்டுள்ள உடல் சோர்வுடன் சேர்ந்து கொண்டுள்ளது. இனி தொடர்ந்து நூல்களைப் பாதுகாக்க முடியுமா என்ற கேள்விகளுடனேயே எனது புத்தகப் பயணம் தொடருகிறது என்றார் அவர்.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி: பல்லடம் மாணிக்கத்தைப் போன்றே புதுக்கோட்டையில் தனியார் நூலகம் நடத்தி வருகிறார் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. தனது மனைவி டோரத்தி அம்மாளுடன் இணைந்து வாழ்நாளின் பெரும் பகுதியை செலவு செய்து சுமார் 85 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களை சேகரித்து வைத்துள்ளார்.

திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகப் பணியாற்றினார். தனது தந்தையிடம் இருந்து பெற்ற 100 நூல்களில் இருந்து நூல் சேகரிப்பு ஆர்வம் தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை பகுதியில் பழைய நூல்கள் கிடைக்கிறது என்பதை அறிந்து அங்கேயே குடிபெயர்ந்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் காகிதத்தின் விலை குறைவாக இருந்ததாம், அதனாலேயே தமிழகத்திலேயே அதிக பதிப்பகங்கள் காரைக்குடி, அதையொட்டிய பகுதிகளில் இருந்துள்ளன.

இவரிடம் 1842-ல் வெளியான வீரமாமுனிவரின் சதுரகராதி, தடை செய்யப்பட்டிருந்த பாரதியின் படைப்புகள், பெரும்பாலான நூல்களின் முதல் பதிப்புகள் என பல அரிய நூல்கள் உள்ளன. இந்த நூல்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும் நாப்தலின் உருண்டைகளுக்கு மட்டுமே ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்கிறார்.

ஞானாலயா நூலகத்தைப் பயன்படுத்தி மட்டும் இதுவரை சுமார் 80 பேர் ஆய்வுப் பட்டமும், 15-க்கு மேற்பட்டோர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த தனியார் நூலகங்கள் கண் முன்னே அழிந்து போனதைக் கண்ட கிருஷ்ணமூர்த்தி, தன்னிடம் உள்ள நூல்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

பழமையான பொருள்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடு இங்கிலாந்து. மேலும் அவர்கள்தான் நூலகத்துக்கும், நூல்களுக்கும் மதிப்பு கொடுக்கின்றனர். அந்த நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு போட்லியான் நூலகத்தை நேரில் கண்டு வியந்துள்ளேன். அதைப் போலவே என்னிடம் உள்ள நூல்களையும் கணினியில் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் அதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்பதால் நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

தமிழகத்தில் மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என சுமார் 4 ஆயிரம் நூலகங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள நூலகங்களில் மட்டுமே தமிழர்களின் வரலாறு, இலக்கியப் பெருமைகளைப் பேசும் பழமையான நூல்கள் உள்ளன. இந்நிலையில் கிடைத்தற்கரிய பெரும் செல்வங்களைக் கொண்டுள்ள இந்த இரண்டு தனியார் நூலகங்களும் தொடர்ந்து சேவை புரிந்திட அரசும், செல்வந்தர்களும் உதவிக்கரம் நீட்டுவது தமிழுக்கு ஆற்றும் தொண்டாகத்தானே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT